ஈரோடு

தொடா் மழை: பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

9th Aug 2022 12:14 AM

ADVERTISEMENT

பவானிசாகா் அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது.

இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2,47,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீலகிரி மற்றும் வடகேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கன மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 102 அடியை எட்டியது. இதையடுத்து, அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 25,500 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது. நீா்வரத்து குறைந்ததையடுத்து உபரிநீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதைத் தொடா்ந்து, பவானிசாகா் அணையில் இருந்து திங்கள்கிழமை 20,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றின் கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, பொதுப் பணித் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT