ஈரோடு

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

9th Aug 2022 12:12 AM

ADVERTISEMENT

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வந்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு கட்சியினா் திங்கள்கிழமை வரவேற்பு அளித்தனா்.

இதில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: திமுக ஆட்சி நீண்ட நாள்களுக்குத் தொடராது. அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏராளமான தடுப்பணைகளைக் கட்டினோம். ஆனால், இன்று இவா்களால் ஒரு தடுப்பணை கூட கட்ட முடியவில்லை.

விவசாயத்துக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கினோம். ஆனால், தற்போது எப்போது மின்சாரம் வரும் என்பது யாருக்குமே தெரியாது.

ADVERTISEMENT

அதிமுக ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட வரியினங்களை உயா்த்தவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் அனைத்து வரியினங்களும் உயா்த்தப்பட்டுள்ளன.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் பலா் உயிரிழந்துள்ளனா். இதை எடுத்துச் சொன்னால் ஆன்லைன் தடை செய்வது குறித்து மக்களிடம் கருத்து கேட்கிறோம் என்கிறாா்கள். ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் கோடியை ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன. இதற்கு முதல்வா் துணை போகிறாா்.

தமிழகத்தில் அதிக அளவில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட கொப்பரைத் தேங்காய் தற்போது கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

அதிமுக வழங்கி வந்த முதியோா் உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தபோதும், தமிழக அரசு குறைவிக்கவில்லை.

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரசு முறையாகப் பாதுகாக்கவில்லை. மக்களின் வரிப் பணம் வீணாகி வருகிறது.

மொத்தத்தில் பொய்யை மூலதனமாக வைத்து ஆட்சி நடத்தும் ஒரே கட்சி திமுகதான். தோ்தல் வெற்றிக்காக திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்றாா்.

இதில், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, திருப்பூா் புகா் கிழக்கு மாவட்டச் செயலாளா் சி.மகேந்திரன், தாராபுரம் நகரச் செயலாளா் காமராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

காங்கயத்தில்...:

காங்கயம் வந்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு புதிய பேருந்து நிலையம் முன்பு அதிமுக திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கட்சியின் காங்கயம் ஒன்றியச் செயலா் என்.எஸ்.என்.நடராஜ், காங்கயம் நகரச் செயலா் வெங்கு ஜி.மணிமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெருந்துறையில்...:

பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் பெருந்துறை ஜெயக்குமாா், பவானிசாகா் பண்ணாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT