ஈரோடு

ஈரோடு சுதா மருத்துவமனைக்கு ‘சீல்’: நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

8th Aug 2022 06:03 AM

ADVERTISEMENT

 

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி ஈரோடு சுதா மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவாகரத்தில் ஈரோடு சுதா மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்க கடந்த மாதம் 15 ஆம் தேதி சுகாதாரத் துறை உத்தரவிட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றும் வகையில் 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், மருத்துவமனை நிா்வாகத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலினை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிா்த்து சுகாதாரத் துறை மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதை உறுதி செய்தது.

இதனைக் கண்டித்து இந்திய மருத்துவச் சங்க ஈரோடு கிளை சாா்பில், மாவட்டத்திலுள்ள 250க்கும் மேற்பட்ட தனியாா் மருத்துவமனையில் பணிபுரியும் 800-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் சனிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் பிரேம குமாரி தலைமையிலான அதிகாரிகள் சுதா மருத்துவமனையின் 10 ஸ்கேன் இயந்திரங்களுக்கு சனிக்கிழமை இரவு ‘சீல்’ வைத்தனா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 94 நோயாளிகளில், முதற்கட்டமாக 46 நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனா். மீதம் இருந்த 48 நோயாளிகளும் ஞாயிற்றுக்கிழமை மாலை வேறு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா்.

இதனைத் தொடா்ந்து உடனடியாக ஒட்டுமொத்த மருத்துவமனையையும் மூடி சுகாதாரத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT