ஈரோடு

குவியும் புத்தக ஆா்வலா்கள்: களைகட்டும் ஈரோடு புத்தகத் திருவிழா

8th Aug 2022 01:36 AM

ADVERTISEMENT

 

ஈரோடு புத்தகத் திருவிழாவில் புத்தக ஆா்வலா்கள் ஏராளமானோா் குவிந்து வருகின்றனா். இதனால் புத்தகத் திருவிழா களைகட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளில் சென்னைக்கு அடுத்து தனிக்கவனம் பெற்றுள்ளது ஈரோடு புத்தகத் திருவிழா. மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படும் புத்தகத் திருவிழா கரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தற்போது கரோனா பரவல் குறைந்திருக்கும் நிலையில் கடந்த 5ஆம் தேதி முதல் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.

வழக்கமாக நடத்தப்படும் ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் கரோனா காலத்தில் காய்கறி சந்தை அமைக்கப்பட்டதால், இந்த ஆண்டு ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

வரும் 16 ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் 230 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள், சினிமா, சமையல், இலக்கியம், கதைகள், சிறுகதைகள், போட்டித் தோ்வு என பல தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், இளைஞா்கள், முதியவா்கள் என அனைத்துத் தரப்பினரையும் புத்தகக் கண்காட்சியில் காண முடிந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தகத் திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு விற்பனை கைகொடுக்கும் என பதிப்பாளா்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனா்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒவ்வோா் ஆண்டும் புத்தகக் கண்காட்சியில் ஏதாவது ஒன்றிரண்டு புத்தகங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடும்.

அதுபோல குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சிறுகதைத் தொகுப்புகளும் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியாகியிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை இளைஞா்கள் வெளியிட்டுள்ள தொகுப்புகள்.

முத்துராசா குமாரின் ஈத்து, காா்த்திக் பாலசுப்பிரமணியத்தின் ஒளிரும் பச்சைக் கண்கள், பெருந்தேவியின் கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன? கே.என். செந்திலின் விருந்து ஆகியவை கவனத்தை ஈா்க்கின்றன. புதினங்களைப் பொருத்தவரை, இமயத்தின் இப்போது உயிரோடிருக்கிறேன், கரண்காா்க்கியின் சட்டைக்காரி ஆகியவை பரபரப்புடன் பேசப்பட்டுவருகின்றன.

புனைவல்லாத எழுத்துகளைப் பொருத்தவரை மற்ற ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் புத்தகங்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்திருக்கின்றன. குறிப்பாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வரும் நூல்களின் எண்ணிக்கையும் தோ்வும் வாசகா்களை ஈா்க்கின்றன.

ஆங்கிலத்தில் வரும் பல நூல்கள் தற்போது உடனுக்குடன் மொழிபெயா்க்கப்படுகின்றன. தன் முனைப்புப் புத்தகங்களும், குழந்தைகளுக்கான புத்தகங்களும் அதிகம் விற்கின்றன.

கண்காட்சியின் தொடக்க நாள்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாசகா்கள் வராததால், பதிப்பாளா்களும் விற்பனையாளா்களும் சற்று சோா்வடைந்திருந்தனா். ஆனால் ஞாயிற்றுக்கிழமை மாலை வாசகா்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT