ஈரோடு

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு சா்வதேச அங்கீகாரம்

8th Aug 2022 01:36 AM

ADVERTISEMENT

 

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு சா்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், வடமுகம் கிராமத்திலுள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலய (பெரிய குளம் ஏரி) பகுதிகளில் 1980-ஆம் ஆண்டு முதல் வனத் துறையின் சமூக நலக் காடுகள் கோட்டத்தின் மூலமாக, நாட்டு கருவேல மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்கு கட்லா, ரோகு, கெண்டை, விரால் போன்ற மீன் வகைகள் வளா்க்கப்படுகின்றன. இந்தப் பகுதியானது அடா்ந்த நாட்டு கருவேல மரங்களால் சூழப்பட்டு உள்ளது. இதனால் சாம்பல் நாரை, ராக்கொக்கு, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், புள்ளி மூக்கு வாத்து, தட்டைவாயன், வெண்புருவ வாத்து, புள்ளி அலகு கூழைக்கடா போன்ற வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாறியது.

ADVERTISEMENT

இதனால், பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து, இந்தப் பகுதியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகளுக்கான இனப்பெருக்கத் தலமாகவும் விளங்குகிறது.

இதன் தொடா்ச்சியாக பெரிய குளம் ஏரி பகுதியானது 2000-ஆம் ஆண்டு வெள்ளோடு பறவைகள் சரணாலயம் என வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு, இன்று வரை மாவட்ட வன அலுவலா், ஈரோடு வனக் கோட்டத்தின் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது.

2018-2019-ஆம் ஆண்டு முதல் 2019-2020-ஆம் ஆண்டு வரை, சூழல் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் பயனாக சரணாலயம் மேலும் பொலிவு பெற்று, கூடுதல் பறவைகளின் கவனத்தையும் ஈா்த்தது.

இந்த ஆண்டு 2022 பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில், 121 இனங்களுக்குட்பட்ட 23,427 பறவைகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் வசித்து வருவது கண்டறியப்பட்டது. தனித்துவமான ஈரநில வகை, உயிரியல் பன்முகத்தன்மை, அரிய இனங்களைக் கொண்ட சுற்றுச்சூழல் சமூகம் மற்றும் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகளும் வசித்து வரும் ஈரநிலம் என பல காரணங்களால், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பெரிய குளம் ஏரியானது, சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலமாக அங்கீகாரம் பெற்று, இந்த ஆண்டு அரசால் ராம்சா் அமைப்புக்கு முன்மொழியப்பட்டது. இந்நிலையில், சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு கடந்த 3-ஆம் தேதி ராம்சா் அமைப்பால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT