ஈரோடு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 15,200 கன அடியாக சரிவு

8th Aug 2022 01:36 AM

ADVERTISEMENT

 

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 15,200 கனஅடியாக குறைந்தது.

105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது பவானிசாகா் அணை. அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதி மற்றும் வடகேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததால், 105 அடி உயரமுள்ள பவானிசாகா் அணையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நீா்மட்டம் 102 அடியை எட்டியது.

இதைத் தொடா்ந்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீா் போக்கி மதகுகள் மூலம் பவானி ஆற்றில் அதிகபட்சமாக 25,500 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை 25,500 கன அடியாக இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 15,200 கன அடியாக சரிந்தது.

இதன் காரணமாக பவானிசாகா் அணையில் இருந்து உபரி நீா் திறப்பு 25,500 கன அடியிலிருந்து 15,100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரி நீா் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனா்.

இருப்பினும் தொடா் மழைக் காலம் என்பதால் எந்த நேரமும் நீா்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அணைக்கு வரும் உபரி நீா் அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 102 அடியாகவும், நீா் இருப்பு 30.3 டிஎம்சி ஆகவும் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT