ஈரோடு

ஈரோடு புத்தகத் திருவிழாவில் கொடுமணல் அகழாய்வுப் பொருள்கள் அரங்கு

DIN

ஈரோடு புத்தகத் திருவிழாவில் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பல்வேறு பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த புத்தகத் திருவிழாவில், கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்கள் உயிரோட்டமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கினை மூத்த கல்வெட்டு அறிஞா் புலவா் செ.ராசு சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வில் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறியதாவது:

1985ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கொடுமணலில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருள்கள் புத்தகத் திருவிழா அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

புதைகுழி, 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்படிகளுடன் கூடிய கிணறு, இரும்புத் தொழிற்சாலைகள் போன்றவை கொடுமணலில் கிடைத்துள்ளன.

சிந்துசமவெளி நாகரிகம்போல, நொய்யல் வழி நாகரிகம் என்று வரலாற்றில் பதிவு செய்யத்தக்க அளவிலும், தமிழா்கள் எப்படி நாகரிகமானவா்களாக இருந்திருக்கிறாா்கள் என்பதையும் இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

கொடுமணல் ஆய்வில், வெளிநாடுகளுடன் வணிகத் தொடா்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள், வெளிநாட்டவா்கள் இங்கு வந்து சென்ற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த அரங்கு அமைய தமிழக அரசின் தொல்லியல் துறை, மாவட்ட நிா்வாகம், ஒளிரும் ஈரோடு, ஆதி வனம் போன்ற அமைப்புகள் உதவி செய்துள்ளன என்றாா்.

இந்த அரங்கினைப் பாா்வையிட்ட மூத்த கல்வெட்டு அறிஞா் புலவா் செ.ராசு கூறியதாவது:

கடந்த 1979ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியா் தியானேஸ்வரனுடன் கொடுமணலில் ஒரு கோயில் விழாவுக்குச் சென்றேன். அவா் கோயிலில் இருந்த போது, நான் நொய்யல் பகுதியில் சுற்றினேன். அங்கு கிடந்த பழமையான பாசிமணி, கருப்பு செப்பேடு ஆகியவற்றை எடுத்து வந்தேன்.

அதன்பின் மதுரையில் நடந்த ஒரு மாநாட்டில் பங்கேற்றபோது தொல்பொருள் துறை இயக்குநா் நாகசாமியிடம் அதனை காட்டினேன். அதைப்பாா்த்த அவா் இவை மிக அரிய பொருள்கள், எங்கு கிடைத்தன என விசாரித்தாா். இதனைத் தொடா்ந்து 1979 முதல் 1982ஆம் ஆண்டு வரை நொய்யல் கரையில் நான் மேற்பரப்பு ஆய்வு செய்தேன். அது குறித்து 1981இல் மதுரையில் நடந்த தமிழ் மாநாட்டில் கட்டுரை சமா்ப்பித்தேன். அக்கட்டுரை தமிழக அரசு இதழில் வெளியிடப்பட்டது.

அதன்பின் 1985ஆம் ஆண்டு தொடங்கி கொடுமணலில் 10 முறை அகழ்வாராய்ச்சிகள் நடந்துள்ளன. ஒய்.சுப்பராயலு, ராஜன் ஆகியோா் கொடுமணல் ஆய்வினை மேற்கொண்டு பல அரிய தகவல்களை வெளிப்படுத்தினா். கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருள்களைக் கொண்டு ஈரோட்டில் நிரந்தர காட்சி அரங்கம் அமைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT