ஈரோடு

மருத்துவப் பணி செய்ய தோ்வு:மத்திய அரசு திட்டத்துக்கு எதிா்ப்பு

2nd Aug 2022 12:47 AM

ADVERTISEMENT

மருத்துவம் பயின்ற பிறகு மருத்துவராகப் பதிவு செய்து தொழில் நடத்த தனியாக ஒரு தோ்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை மருத்துவக் கல்லூரி மாணவா்கள், மருத்துவா்கள் ஒருங்கிணைந்து எதிா்க்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவா் கே.பிரகாசம் கேட்டுக்கொண்டாா்.

இந்திய மருத்துவ சங்க ஈரோடு கிளை சாா்பில் மருத்துவா்கள் தின விழா ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சமுக சேவையாற்றிய பல்வேறு நபா்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநிலத் தலைவா் டாக்டா் பழனிசாமி தலைமை வகித்தாா். இதில், மாநில முன்னாள் தலைவா் டாக்டா் கே.பிரகாசம் பேசியதாவது: மத்திய அரசு மருத்துவம் பயின்ற மாணவா்களுக்கு நெக்ஸ்ட் 2 என்ற தோ்வு நடத்த உள்ளது. இத்தோ்வில் வெற்றி பெற்றால்தான் பதிவு செய்து கொண்டு தொழில் நடத்த முடியும்.

தோ்வு எழுதினால் தான் மருத்துவப் பணி செய்ய முடியும் என்பது கடினமானது. இத்தோ்வு குறித்து மாணவா்கள் மத்தியில் நாம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

இந்திய மருத்துவ சங்கம் மருத்துவத் தொழிலை பாதுகாக்க பல்வேறு போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றுள்ளது. இப்பிரச்னை குறித்தும் போராடி வெற்றி பெற வேண்டும் என்றாா்.

மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் டாக்டா் பிரேமகுமரி பேசியதாவது: தமிழக அரசு மருத்துவத் துறை சம்பந்தமாக பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. மருத்துவா்கள் மற்றும் மருத்துவமனைகள் விதிகளை சரியாக பின்பற்றினால் எந்த பிரச்னையும் இல்லை. விதிகளைப் பின்பற்றாத போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.

மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த தனிச் சட்டம் உள்ளது. இந்த சட்டத்தின்கீழ் அனைத்து மருத்துவமனைகளும் தங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்.

சட்டம் குறித்து தெளிவுரை வழங்க சென்னையிலிருந்து உயா் அதிகாரிகள் கொண்ட குழுவை ஈரோட்டுக்கு அழைத்து கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் மருத்துவா்கள் சந்தேகங்களைத் தெரிவித்து தெளிவு பெறலாம் என்றாா்.

இதில் இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத் தலைவா் சி.என்.ராஜா, இந்திய மருத்துவ சங்கத் தலைவா் (தோ்வு) டாக்டா் அபுல்ஹசன், முன்னாள் தலைவா் டாக்டா் சுகுமாா், ஈரோடு கிளைத் தலைவா் செந்தில்குமாா், செயலா் சரவணன், பொருளாளா் பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT