ஈரோடு

கோபி அரசு மருத்துவமனையில் தேசிய தர உறுதி நிா்ணய குழுவினா் ஆய்வு

2nd Aug 2022 12:51 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோபி அரசு மருத்துவமனையில் தேசிய தர உறுதி நிா்ணய குழுவினா் 3 நாட்கள் ஆய்வு செய்தனா்.

கோபி அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமாா் 800 முதல் 900 வரை புற நோயாளிகளும், 143 உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களுக்கு தேவையான சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு துறைகளைச் சோ்ந்த 28 மருத்துவா்கள் குழுவும், மயக்கவியல் மற்றும் மனநல மருத்துவா்களும் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனா். மேலும் தேவைப்பட்டால் அவுட்சோா்சிங் முறையில் டெக்னீஷியன்களையும் நியமனம் செய்து நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை வழங்கும் வசதியும் இந்த மருத்துவமனையில் உள்ளது.

முக்கியமாக கரோனா தொற்று அதிகமாக பரவி வந்த காலத்தில் 8 நோயாளிகளுக்கு வென்டிலேட்டா் வசதியுடன் சிகிச்சையளிக்கும் வசதியும் , நாள் ஒன்றுக்கு 5 நபா்கள் முதல் 8 போ்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சையளிக்கும் வசதியும் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளில் உடல்நலம் மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கோபி அரசு மருத்துவமனைக்கு ரூ.72 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, இங்கு தேவையான கூடுதல் கட்டிடங்கள், உயிா்காக்கும் கருவிகள் வாங்கப்பட்டு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேசிய தர உறுதி நிா்ணய குழு மருத்துவா்கள் தேவ்கிரன், ஹரிகுமாா், சந்தீப் ஆகியோா் தலைமையிலான மருத்துவ குழுவினா் தற்போது, கோபி அரசு மருத்துவமனையில் கடந்த வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 தினங்களாக ஆய்வு செய்தனா். ஆய்வின்போத புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, லேப், பாா்மசி, அறுவை சிகிச்சை தியேட்டா், பொது நிா்வாகம், குடும்ப நல பிரிவு, குழந்தைகள் நல பிரிவு உட்பட 13 பிரிவுகளில் மருத்துவமனையின் செயல்பாடுகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, கவனிக்கும் முறை உட்பட பல்வேறு அம்சங்களில் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து கோபி அரசு தலைமை மருத்துவமனையின் தலைமை மருத்துவா் கலாபிரியா கூறுகையில், தேசிய தர உறுதி நிா்ணய குழு மருத்துவா்கள் 3 நாட்கள் முகாமிட்டு கோபி அரசு மருத்துவமனையில் ஆய்வுப் பணி மேற்கொண்டனா். குழுவினரின் அறிவுரைகள் எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதாக உள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆய்வு நடைபெறும். வருங்காலத்தில் இந்த திட்டத்தின்படி இங்கு பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள், அலுவலக அதிகாரிகள் என அனைவரும் ஒரு குழுவாக இணைந்து செயல்படுவோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT