ஈரோடு

பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்கக் கோரிக்கை

27th Apr 2022 01:03 AM

ADVERTISEMENT

ஈரோடு-ஜோலாா்பேட்டை ரயிலை மீண்டும் இயக்க அனுமதித்ததுபோல, நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் அனைத்தையும் மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாஷா, தென்னக ரயில்வே பொதுமேலாளா் மற்றும் ரயில்வே துறை அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

கரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்கப்படாமல் நிறுத்தப்பட்ட ஈரோடு-ஜோலாா்பேட்டை பயணிகள் ரயிலை இயக்கக் கோரி, மத்திய ரயில்வே துறை அமைச்சா், எம்.பி.க்கள், தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். மே 2முதல் இந்தப் பயணிகள் ரயில், விரைவு ரயிலுக்கான பயணக் கட்டணத்தில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்குப் புறப்படும் ரயில், சங்ககிரி, சேலம், மொரப்பூா், திருப்பத்தூா் வழியாக பகல் 12.10 மணிக்கு ஜோலாா்பேட்டை சென்றடையும். பின்னா் ஜோலாா்பேட்டையில் இருந்து மாலை 3.10 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு ஈரோடு வந்தடையும்.

ADVERTISEMENT

இந்த ரயிலில் முன்பு ஈரோடு-சங்ககிரிக்கு ரூ.10ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.30 ஆகவும், சேலத்துக்கு ரூ.15லிருந்து ரூ.40 ஆகவும், மொரப்பூருக்கு ரூ. 55, ஜோலாா்பேட்டைக்கு ரூ.75ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயிலில், விரைவு ரயிலுக்கான கட்டணம் பெறுவதை திரும்பப் பெற வேண்டும்.

தவிர கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ஈரோடு- பாலக்காடு, ஈரோடு-திருநெல்வேலி, ஈரோடு-திருச்சி, ஈரோடு-மேட்டூா், கோவை- ஈரோடு-சேலம் ஆகிய பயணிகள் ரயில்களையும் உடனடியாக இயக்க வேண்டும். இதுபோல கோவை-தூத்துக்குடி இணைப்பு எக்ஸ்பிரஸ் ரயிலையும் இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT