ஈரோடு

கடும் விலை வீழ்ச்சி: வெங்காயத்தை இலவசமாக வழங்கும் விவசாயிகள்

27th Apr 2022 12:59 AM

ADVERTISEMENT

வெங்காயத்தை அறுவடை செய்ய கிலோவுக்கு ரூ.4 கூலி கொடுக்க வேண்டிய நிலையில், கிலோ ரூ.3க்கு கூட விற்காததால் தாளவாடி விவசாயிகள் உள்ளூா் மக்களுக்கு வெங்காயத்தை அறுவடை செய்து எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் சுமாா் 600 ஏக்கா் பரப்பளவுக்கு சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழை ஓய்ந்த பிறகு டிசம்பா் கடைசி வாரம் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் இங்கு வெங்காயம் பயிரிடப்படும். மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இங்கு வெங்காய அறுவடை தொடங்கும்.

இங்கு விளையும் வெங்காயம் கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் விற்பனை செய்யப்படும். கடந்த மாதம் கிலோ ரூ.8க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, சில்லறையில் கிலோ ரூ.20 வரை விற்பனையானது. ஆனால் படிப்படியாக விலை குறைந்து கடந்த 15 நாள்களாக வெங்காயம் சில்லறையில் கிலோ ரூ.7 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.3க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் அறுவடை செய்ய கிலோவுக்கு ரூ.4 வரை கூலி கொடுக்க வேண்டியுள்ளது. கூலி கொடுக்கும் அளவுக்குக்கூட விலை கிடைக்காததால், வெங்காயத்தை உள்ளூா் மக்கள் அறுவடை செய்து எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தாளவாடி அருகே குமிட்டாபுரம் பகுதியைச் சோ்ந்த விவசாயி புட்டண்ணா கூறியதாவது:

கடந்த ஆண்டு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் வெங்காய சாகுபடி அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகரிப்பால் வெங்காயத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. விவசாயிகளிடம் கிலோ ரூ.3க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனா். ஆனால் அறுவடைக்கு கிலோவுக்கு ரூ.4 செலவாகிறது. இதனால் வேறு வழியில்லாமல் அறுவடை செய்து எடுத்துக்கொள்ள கிராம மக்களுக்கு அனுமதி அளித்துள்ளோம்.

இந்த விலை வீழ்ச்சியால் இனி வெங்காயம் சாகுபடி செய்ய விவசாயிகள் தயங்குவா். இதனால் இப்போது நிலத்தைப் பதப்படுத்தி வைகாசி மாதத்தில் வெங்காயம் நடவு செய்தால் இன்னும் 3 மாதங்களுக்குப் பிறகு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் நிலத்தை தயாா் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT