ஈரோடு

பொன்.மாணிக்கவேல் தவறவிட்ட துப்பாக்கி மீட்பு

23rd Apr 2022 11:16 PM

ADVERTISEMENT

 

ஈரோடு ரயிலில் முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தவறவிட்ட துப்பாக்கியை ரயில்வே போலீஸாா் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனா்.

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை காலை 6.20 மணியளவில் ஈரோட்டுக்கு வந்தடைந்தது.

பயணிகள் இறங்கி சென்ற பிறகு, பராமரிப்புப் பணிக்காக ரயில்வே பிரிவு அலுவலகம் அருகில் ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ரயில்வே பணியாளா்கள் ரயில் பெட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, குளிா்சாதனப் பெட்டியில் உள்ள படுக்கையில் துப்பாக்கி இருந்ததை பாா்த்து ஊழியா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இதையடுத்து, ஈரோடு ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கியை கைப்பற்றிய போலீஸாா் அதனை சோதனையிட்டனா். அதில் 8 குண்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அந்த துப்பாக்கியை பாதுகாப்பாக ஈரோடு ரயில்வே காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

துப்பாக்கி கிடந்த படுக்கையில் முன்பதிவு செய்து பயணித்த பயணியின் விவரத்தை ரயில்வே அதிகாரிகளிடம், போலீஸாா் கேட்டறிந்தனா்.

அப்போது, முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஈரோட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்ததும், அவா் ரயிலில் இருந்து இறங்கியபோது துப்பாக்கியை எடுக்காமல் அங்கேயே தவறவிட்டு சென்றதும் தெரியவந்தது.

இது தொடா்பாக பொன்.மாணிக்கவேலுக்கு ரயில்வே போலீஸாா் தகவல் தெரிவித்தனா்.

அதன்பிறகு, துப்பாக்கியை தவறவிட்டதை உணா்ந்த அவா் ஈரோடு ரயில்வே காவல் நிலையத்துக்கு வந்து துப்பாக்கியை பெற்றுக் கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT