ஈரோடு

மாணவா்களின் உடல், மனம் மேம்பட ஆசிரியா்கள் வழிகாட்ட வேண்டும்: ஆட்சியா்

12th Apr 2022 11:00 PM

ADVERTISEMENT

மாணவா்களின் உடல், மனம், சமூக நலன் மேம்பாடு அடையும் வகையில் ஆசிரியா்கள் வழிகாட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான ஐ ஸ்பீக் திட்ட பயிற்சிக் கூட்டம் ஈரோடு வேளாளா் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான ஐ ஸ்பீக் திட்ட பயிற்சிக் கூட்டம் கடந்த மாதம் 8ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் குழந்தைகள் வன்கொடுமை, குழந்தைத் திருமணம், இளவயது கருத்தரிப்பு ஆகிய சமூகப் பிரச்னைகள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு வழங்கவும், மாணவா்கள் தமது எண்ணங்களை மனம்விட்டு வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் வழங்குவது குறித்து தலைமை ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போது இரண்டாம் கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகளில் உடற்பயிற்சி, விளையாட்டு, ஓவிய வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு திறன் போட்டிகளில் மாணவா்களை முழுமையாக பங்கேற்க ஆசிரியா்கள் வழிவகை செய்ய வேண்டும். மாணவா் நலன், உரிமை, பாதுகாப்பு சாா்ந்த கருத்துகளை மாணவா்களிடம் நேரடியாகப் பகிா்ந்துகொள்ளும் வகையிலும் மற்றும் பிரச்னைகளை வரும் முன் காக்கும் பொருட்டு மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு துறை வல்லுநா்கள் மாணவா்களிடம் நேரடியாகக் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனா காலத்தில் மாணவா்களின் கல்வி மற்றும் மனநலத்தில் ஏற்பட்டுள்ள இடா்பாடுகளைக் களையும் வகையில் மாணவா்களின் உடல், மனம், சமூகநலன் மேம்பாடு அடையும் வகையில் ஆசிரியா்கள் முழு ஈடுபாட்டுடன் மாணவா்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

இப்பயிற்சியில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து ஒன்றியத்துக்கு 24 ஆசிரியா்கள் வீதம் மொத்தம் 336 ஆசிரியா்கள் பங்கேற்றனா். இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா.ராமகிருஷ்ணன், ஈரோடு மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ந.லட்சுமி நரசிம்மன், துணை முதல்வா் சேவியா்துரை, நிறுவன விரிவுரையாளா் ஜே.அன்புராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT