பவானியில் தேசிய நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த மருத்துவக் கழிவுகளால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பவானி லட்சுமி நகா் காவிரி ஆற்றின் பாலத்தில் இருந்து சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்பட்ட கையுறைகள், கழிவுகள் சிதறிக் கிடந்தன. மூட்டையாகக் கிடந்த இக்கழிவுகள் மீது வாகனங்கள் அடுத்தடுத்து சென்றதால் காற்றில் பறந்து சாலை முழுவதும் கிடந்தன.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சித் தலைவா் மகேஸ்வரன், 30 துப்புரவுப் பணியாளா்களைக் கொண்டு சிதறிக் கிடந்த கழிவுகளைச் சேகரித்து அப்புறப்படுத்தினாா். சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு மருத்துவக் கழிவுகள் சாலையில் கிடந்தததோடு, துா்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.