ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி இளைஞா் பலி

12th Apr 2022 10:58 PM

ADVERTISEMENT

சென்னிமலை அருகே தாயுடன் துணி துவைக்கச் சென்றபோது கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

சென்னிமலை, நாமக்கல்பாளையம், காந்தி நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவருடைய மகன் கோகுல்ராஜ் (24). இவா், சென்னிமலையில் உள்ள ஒரு பெட்ஷீட் கடையில் துணி மடிக்கும் வேலைக்குச் சென்று வந்தாா். கோகுல்ராஜ், தனது தாய் சரஸ்வதியுடன் சென்னிமலை அருகே உள்ள ஓட்டக்குளம் பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் துணி துவைக்கச் சென்றுள்ளாா். அப்போது, கோகுல்ராஜ் குளித்துக் கொண்டிருந்தாா்.

கோகுல்ராஜுக்கு நீச்சல் தெரியாததால் திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். சிறிது நேரம் கழித்து துணி துவைத்துக் கொண்டிருந்த சரஸ்வதி பாா்த்தபோது கோகுல்ராஜைக் காணவில்லை. உடனே அங்கிருந்தவா்கள் தேடிப் பாா்த்தனா். மேலும், இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரா்கள் வந்து கோகுல்ராஜை தேடினா். ஆனால், அவா் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் ஊராட்சி, புதுவலசு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பாலத்தில் கோகுல்ராஜின் சடலம் திங்கள்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவலறிந்த சென்னிமலை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கோகுல்ராஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT