ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் 16.2 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்களுக்குத் தடை

9th Apr 2022 05:30 AM

ADVERTISEMENT

திம்பம் மலைப் பாதையில் 16.2 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்களுக்கு பண்ணாரி சோதனைச் சாவடியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப் பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு உயா் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தடை விதித்தது. இதை எதிா்த்து சத்தியமங்கலம் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் மற்றும் விவசாய சங்கத்தினா் சாா்பில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பொது போக்குவரத்துக்குத் தடை விதிப்பதாகவும், உள்ளூா் மக்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி இரவு நேரங்களில் பயணிக்கலாம் என்றும், 16.2 டன் எடைக்கு மேல் பாரம் ஏற்றிய வாகனங்களுக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு நேர பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உயா் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமாறு வனத் துறைக்கு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியதையடுத்து, திம்பம் மலைப் பாதையில் அதிக பாரம் ஏற்றிய லாரிகள் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டன. பண்ணாரி சோதனைச் சாவடியில் 16.2 டன்னுக்கு குறைவாக எடை அளவைக் காண்பித்த பிறகு வனத் துறையினா் அனுமதிக்கின்றனா். பாரம் ஏற்றி வரும் லாரிகள் சத்தியமங்கலம் பகுதியில் தனியாா் எடைபோடும் நிலையங்களில் எடைபோட்டு அதற்குரிய சீட்டை பெற்று பயணிக்கின்றன. சில சரக்கு வாகனங்கள் கொள்முதல் ரசீதுபடி சரக்கு எடை அளவைக் காண்பித்துச் செல்கின்றன. 10 சக்கரம் கொண்ட சரக்கு பாரம் இல்லாத காலி வண்டிகள் அனுமதிக்கப்படுகின்றன. பண்ணாரி சோதனைச் சாவடியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டன. 12 சக்கரத்துக்கு மேல் உள்ள பால் வண்டி உள்ளிட்ட லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. தற்போது வனத் துறையினா் வழக்கம்போல வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலித்து வருகின்றனா். மேலும், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி வெள்ளிக்கிழமை இரவு முதல் இரவு நேர அரசுப் பேருந்துகள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT