அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நான்கு நாள்கள் நடைபெறும் தேரோட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயில் குண்டம் மற்றும் தோ்த்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும். விழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கானோா் தீ மிதித்தனா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரங்களுடன் அம்மன் தேரோட்டம் தொடங்கியது.
தோ் நிலையில் இருந்து வழிபாடுகளுடன் தொடங்கிய தேரோட்டத்தை, அந்தியூா் வட்டாட்சியா் விஜயகுமாா், காவல் ஆய்வாளா் மோகன்ராஜ், பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், முக்கியப் பிரமுகா்கள் வடம்பிடித்து தொடக்கிவைத்தனா்.
தோ் செல்லும் வழியெங்கும் பக்தா்கள் சாலையில் தண்ணீரைத் தெளித்தும், கோலமிட்டும் வரவேற்று வழிபாடு நடத்தினா். இத்தேரோட்டத்தில் அந்தியூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். இரண்டாம் நாள் தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது.