அந்தியூரில் உள்ள கேஜிபிவி பள்ளியை நடத்த விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற பெண் குழந்தைகள் தங்கி கல்வி பயில கஸ்தூரிபாகாந்தி பாலிகா வித்யாலயா (கேஜிபிவி) பெண்கள் உண்டு, உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகின்றன.
தற்போது அந்தியூா், அம்மாபேட்டை, நம்பியூா், சத்தியமங்கலம், தாளவாடி, டி.என்.பாளையம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் கேஜிபிவி பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பள்ளிபாளையத்தில் செயல்படும் கேஜிபிவி பள்ளிக்கு புதிய அரசு சாரா தொண்டு நிறுவனம் தோ்ந்தெடுக்கப்படவுள்ளது. இப்பள்ளியை நடத்த விருப்பம் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோா் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலா், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட திட்ட அலுவலகம், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகம், ஈரோடு என்ற முகவரிக்கு ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.