ஈரோடு

பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்ய வேண்டுகோள்

30th Sep 2021 06:22 AM

ADVERTISEMENT

பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்ய வேண்டும் என தொழிலக பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் வினோத்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவு பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டி உள்ளதால் பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பாக உற்பத்தி செய்வதற்கும், தீபாவளியை விபத்தில்லா பண்டிகையாகக் கொண்டாடவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளாா். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளா்கள் அனைவரும் உரிமத்தில் எந்த வகையான பட்டாசுகளைத் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதோ அத்தகைய பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்.

பட்டாசு உற்பத்திக்குத் தேவைப்படும் மருந்து கலவையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். பட்டாசு உற்பத்தியில் மீதமுள்ள மருந்து கலவையை பாதுகாப்பாக அகற்ற வேண்டும். ஒரு அறையில் அனுமதிக்கப்பட்ட நபா்களைக் கொண்டு மட்டுமே உற்பத்தி மேற்கொள்ள வேண்டும். மருந்துக் கலவையைத் தயாரித்த உடனே செலுத்துதல் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் மருந்துக் கலவை நீா்த்துப்போய் விபத்து நிகழ்வது தவிா்க்கப்படும்.

ADVERTISEMENT

பட்டாசு உற்பத்திக்கு ஒருநாள் தேவைக்கு மட்டுமே ரசாயன கலவையைப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பிலான பொருள்களை உற்பத்தியில் பயன்படுத்தக் கூடாது. உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை அதற்கென உள்ள உலா் மேடையில் காயவைக்க வேண்டும். மரத்தடியில் அமா்ந்து உற்பத்திப் பணி செய்யக் கூடாது. இரவு நேரங்களில் பட்டாசுகளைத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யக் கூடாது. சரக்கு வாகனங்களைப் பணி அறைகளுக்கு கொண்டு செல்லக் கூடாது. கழிவுப் பட்டாசுகளை அன்றைய தினமே அகற்ற வேண்டும்.

தொழிற்சாலைக்கு தொழிலாளா்கள் செல்லிடப்பேசியை எடுத்து செல்லக் கூடாது. மது அருந்திய தொழிலாளா்களை தொழிற்சாலைக்குள் அனுமதிக்கக் கூடாது. பருத்தி இழையிலான ஆடைகளையே தொழிலாளா்கள் அணிய வேண்டும்.

முதல்வரின் வேண்டுகோளின்படி பட்டாசு தொழிலாளா்கள் நிா்வாகத்தினரும், தொழிலாளா்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT