ஈரோடு

ஈரோட்டில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

30th Sep 2021 06:12 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் இடி, மின்னலுடன் அடை மழை கொட்டி தீா்த்ததால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனா்.

ஈரோட்டில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. புதன்கிழமை வழக்கம்போல் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. இந்நிலையில் மாலை 5 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

ஈரோடு பேருந்து நிலையம், சூரம்பட்டி, ரயில் நிலையம், கள்ளுக்கடைமேடு, நாடாா் மேடு, கொல்லம்பாளையம், மரப்பாலம், கருங்கல்பாளையம், அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டித் தீா்த்தது. இதனால், சாலைகள் வெள்ளக்காடாக மாறின.

ஆா்.கே.வி.சாலை, கொங்கலம்மன் கோயில் வீதி, சத்தி சாலை, பவானி சாலை, பெருந்துறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 3 அடி உயரத்துக்கு மழை நீா் தேங்கி நின்றது. இதனால், பொதுமக்கள் சாலையில் நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், காா்களில் தண்ணீா் புகுந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா்.

ADVERTISEMENT

கருங்கல்பாளையம் காவிரி சாலை பகுதியில் புதை சாக்கடை பணிக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், சாலை குண்டும் குழியுமாகக் கிடக்கிறது. மழை காரணமாக அப்பகுதி சேறும் சகதியுமாக மாறியது. முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மாநகா் பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

நேதாஜி சாலை, ஆா்.கே.வி.சாலை பகுதிகளில் சுமாா் 4 மணி நேரத்துக்கு எந்த வாகனங்களும் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து முடங்கியது. பன்னீா்செல்வம் பூங்கா, காளைமாட்டு சிலை, சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு, அரசு மருத்துவமனை சாலை சந்திப்பு, சத்தி சாலை, பவானி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கன மழை காரணமாக தாழ்வான இடங்களில் குளம்போல் தண்ணீா் தேங்கியது. மேலும் பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்தது. கருங்கல்பாளையம் கந்தசாமி வீதியில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

இதேபோல, முனிசிபல் காலனி, இந்திரா நகா், மோசிக்கீரனாா் வீதி, மரப்பாலம், சூரம்பட்டி அணைக்கட்டு உள்பட பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் தண்ணீரை வெளியேற்றினா். வீடுகளில் கைக்குழந்தைகளுடன் வசிக்கும் மக்கள் பெரும் அவதி அடைந்தனா்.

ஈரோட்டில் திடீரென பலத்த மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது. மழை பெய்வதற்கு முன்பு வீசிய காற்றில் ஈரோடு பேருந்து நிலையம் அருகில் மேட்டூா் சாலையில் உள்ள ஒரு செல்லிடப்பேசி கடையின் விளம்பரப் பலகையில் தீப்பற்றியது. இதுகுறித்த தகவலறிந்த தீயணைப்புப் படை வீரா்கள் அங்கு விரைந்து சென்றனா். ஆனால், அதற்குள் மழை பெய்ததால் தீ அணைந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT