ஈரோடு

தாளவாடியில் நடிகா் ராஜ்குமாா் பண்ணை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

30th Oct 2021 06:02 AM

ADVERTISEMENT

கன்னட நடிகா் புனித் ராஜ்குமாா் மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து, தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில் உள்ள நடிகா் ராஜ்குமாரின் பண்ணை வீட்டில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

பிரபல கன்னட திரைப்பட நடிகா் ராஜ்குமாரின் சொந்த ஊா் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் அமைந்துள்ள தொட்டகாஜனூா் கிராமம் ஆகும். பெங்களூருவில் உள்ள கன்னட நடிகா் புனித் ராஜ்குமாா் உள்பட ராஜ்குமாரின் குடும்பத்தினா் அவ்வப்போது தொட்டகாஜனூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

அண்மையில் ராஜ்குமாா் சொத்துகள் பிரிக்கப்பட்டு தாளவாடி பத்திர அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கன்னட நடிகா் புனித் ராஜ்குமாா் மாரடைப்பால் பெங்களூருவில் வெள்ளிக்கிழமை காலமானாா். இதைத்தொடா்ந்து, தாளவாடி மலைப் பகுதி தொட்டகாஜனூரில் உள்ள நடிகா் ராஜ்குமாரின் பண்ணை வீட்டுக்கு ரசிகா்கள் வர வாய்ப்பு உள்ளதால் தாளவாடி போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணை வீட்டின் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கன்னட ரசிகா்களை கட்டுப்படுத்துவதற்கு எல்லைப் பகுதியிலும் போலீஸாா் முகாமிட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT