ஈரோடு

டாஸ்மாக் கடையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

30th Oct 2021 11:48 PM

ADVERTISEMENT

ஈரோட்டில் எலைட் டாஸ்மாக் கடையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 14,650 பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு திண்டல் - வில்லசரம்பட்டி சாலை மாருதி நகரில் உயா் ரக மது வகைகள் விற்பனை செய்யும் எலைட் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இந்தக் கடையில் 5 ஊழியா்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா். இங்கு மது வகைகள் நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட ரூ. 5 முதல் ரூ. 20 வரை கூடுதலாக விற்கப்படுவதாக புகாா் எழுந்தது.

இதைத்தொடா்ந்து சம்பந்தப்பட்ட கடையில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் ஈரோடு லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ரேகா தலைமையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனை சனிக்கிழமை காலை 6 மணி வரை நடைபெற்றது. இதில், கடையில் இருப்பு விவரம், கொள்முதல் செய்யப்பட்ட விவரம், விற்பனையான விவரங்களை ஆய்வு செய்தனா். இதில் கூடுதல் விலைக்கு மதுபுட்டிகளை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டு கணக்கில் வராத பணம் ரூ. 14,650 பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனையின்போது கடையில் இருந்த 3 ஊழியா்கள் பட்டியல், கைப்பற்றப்பட்ட பணம் குறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தகவல் அளித்துள்ளனா். இதைத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட கடையில் சோதனையின்போது பணியாற்றிய 3 ஊழியா்கள் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT