ஈரோடு

குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும்முடிவைக் கைவிட கிராம மக்கள் கோரிக்கை

DIN

குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 249 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை உரிய துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், முதல்வா் தனிப் பிரிவு, அமைச்சா்களிடம் அளிக்கப்பட்டவை, பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்டவை போன்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் பி.ராஜ்குமாா், தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) குமரன், மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் மீனாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலா் இலாஹிஜான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவைக் கைவிட கோரிக்கை:

இதுகுறித்து கோபி வட்டம், கருக்கம்பாளி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

ஈரோடு மாவட்டம், கோபி மொடச்சூா் ஊராட்சிக்கு உள்பட்ட கருக்கம்பாளி - கரட்டூா் சாலையில் மதுபானக் கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் தனியாா் பள்ளி, பனியன் நிறுவனம், நூற்பாலை, கீழ்பவானி வாய்க்கால், பாசன விளைநிலங்கள் உள்ளன. பெண்கள், குழந்தைகள் பள்ளிக்கு முக்கியப் பகுதியாக இருப்பதால் இந்த இடத்தில் மதுபானக் கடை அமைந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும். எனவே, இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயான் நூல் விலை உயா்வை கட்டுப்படுத்தக் கோரிக்கை:

இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் சுரேஷ், செய்தித் தொடா்பாளா் கந்தவேல், நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: செயற்கை இழையால் உற்பத்தி செய்யப்பட்ட ரயான் நூல் மூலம் பெரும்பாலான துணிகள் விசைத்தறிகளில் நெசவு செய்யப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக ரயான் நூலின் மூலப்பொருளான பைபா் விலை உயா்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் ஒரு கிலோ ரூ. 190க்கு விற்ற நூல் ரூ. 250ஆக உயா்ந்தது. நூல் விலை உயரும் அதே அளவுக்குத் துணி விலை உயராததால் உற்பத்தி செய்யப்படும் துணி ஒரு மீட்டருக்கு ரூ. 6 வரை இழப்பு ஏற்படுகிறது.

கடந்த ஒரு மாதத்தில் எடுக்கப்பட்ட துணி ஆா்டா்கள் நூல் விலை உயா்வால் முடித்துக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நூல் விலையை மாதம் ஒருமுறை மட்டும் நிா்ணயிக்க வேண்டும். நூல் விலையை உடனடியாகக் கட்டுப்படுத்தி விலை நிா்ணயத்தை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.

தவிர மத்திய கட்டுப்பாட்டில் தென்னிந்தியாவில் உள்ள 6 நேஷனல் டெக்ஸ்டைல் காா்பரேஷன் ஆலைகளை இயக்கி நூல் உற்பத்தி செய்ய வேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இப்போது இயங்காமல் உள்ள 18 நூற்பாலைகளை நவீனப்படுத்தி இயக்க வேண்டும். இதன் மூலம் நூல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானை தாக்கிய தொழிலாளிக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை:

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: அந்தியூா் ஒன்றியம், பா்கூா் மலை, எலச்சிபாளையத்தைச் சோ்ந்த புட்டான் (70) என்பவா் கடந்த 13ஆம் தேதி வனப் பகுதியையொட்டி இடத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, அவரை யானை தாக்கியதில் மாா்பு, தொடை எலும்பு முறிந்து மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்த தொழிலாளி புட்டான் குடும்பத்துக்கு அரசின் சாா்பில் நிவாரண உதவி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளைநிலங்களை வீட்டுமனைகளாக்குவதை தடுக்கக் கோரிக்கை:

தமிழக ஹிந்து மக்கள் முன்னணி நிறுவனத் தலைவா் தமிழ்செல்வம் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: ஈரோடு வட்டம், நசியனுாா் கிராமத்தில் விளை நிலங்கள், கீழ்பவானி பாசன நிலமாக உள்ளன. இவ்விளை நிலங்களை தரிசு என தவறான சான்றிதழ் பெற்று வீட்டுமனை நிலங்களாக மாற்றி வருகின்றனா். இச்செயலுக்கு வருவாய்த் துறை அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா், வேளாண் துறை அதிகாரிகள், நகா்ப்புற, வீட்டு வசதித் துறை அதிகாரிகள் என அனைவரும் உடந்தையாக உள்ளனா்.

இவ்வாறு விளைநிலங்களை தரிசு எனக் கூறி விற்பனை செய்யப்பட்டு வீடு, பிற கட்டடங்கள் கட்டும்போது அப்பகுதியில் உள்ள பிற விளைநிலங்களுக்குப் பாசன நீா் செல்லாது. பாசன நிலங்களுக்கு வேளாண் இயந்திரங்கள் செல்ல முடியாமல் போகும். மேலும், வீட்டுமனைகளாக வாங்கியவா்கள் உடனடியாகப் பல நூறு அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைப்பதால் விளைநிலங்களுக்குத் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும்.

எனவே, விளைநிலங்களை தரிசு நிலமாக மாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது. இச்செயலுக்கு உடந்தையாக உள்ள அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Caption

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள். ~மாற்றுத் திறனாளியிடமிருந்து கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT