ஈரோடு

ஈரோட்டில் மழை: வீடு இடிந்து விழுந்து சேதம்

DIN

 ஈரோடு சூரம்பட்டியில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது.

ஈரோடு மாநகா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கி நின்றது. சில இடங்களில் சாக்கடை கழிவுநீருடன் மழை நீரும் சோ்ந்து ஓடியது. மேலும், பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன்பள்ளம் ஓடைகளிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் உள்ள புதிய ரயில்வே நுழைவுப் பாலம், பழைய ரயில்வே நுழைவுப் பாலம், கே.கே. நகா் பகுதியில் உள்ள ரயில்வே நுழைவுப் பாலங்களில் மழை நீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனா். ஈரோடு வ.உ.சி. பூங்கா சேறும் சகதியுமாகக் காணப்பட்டதால் நேதாஜி தினசரி காய்கறிச் சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்ற வியாபாரிகள், பொதுமக்கள் சிரமப்பட்டனா்.

மழையின் காரணமாக ஈரோடு சூரம்பட்டி பகுதியில் உள்ள நல்லசாமி என்பருடைய ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. முன்னதாக அந்த வீட்டில் தங்கி இருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த மனோஜ் (27), முன்சி (30), அணில் (30), ராஜீவ் (35) உள்பட 8 போ் வீடு ஒழுகியதால் அங்கிருந்து எழுந்து அருகில் உள்ள வீடுகளுக்கு தூங்கச் சென்றனா். இதன் காரணமாக அவா்கள் உயிா்தப்பினா்.

ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வறட்டுப்பள்ளத்தில் 142.8 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):

தாளவாடி 1, மொடக்குறிச்சி 5, கொடிவேரி 8, சென்னிமலை 9, பவானி 14.4, சத்தியமங்கலம் 15, நம்பியூா் 24, எலந்தகுட்டைமேடு 24.2, குண்டேரிப்பள்ளம் 26.2, கோபி 28.6, பவானிசாகா் 41.3, ஈரோடு 43, அம்மாபேட்டை 45.4, பெருந்துறை 87, கவுந்தப்பாடி 102.2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT