ஈரோடு

வாக்காளா் சிறப்பு முகாம்: புறக்கணிக்க வருவாய்த் துறை அலுவலா்கள் முடிவு

23rd Oct 2021 05:53 AM

ADVERTISEMENT

சட்டப் பேரவைத் தோ்தல் மதிப்பூதியம், செலவினம் வழங்க வலியுறுத்தி வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களைப் புறக்கணிக்க வருவாய்த் துறை அலுவலா்கள் முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் கு.குமரேசன் கூறியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்து 6 மாதங்களான நிலையில் தோ்தல் பணியில் இரவு, பகலாகப் பணியாற்றிய அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலா்களுக்கும் தோ்தல் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. கரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோதும், மக்கள் ஜனநாயக கடமையாற்ற வருவாய்த் துறை அலுவலா்களான கிராம உதவியாளா் முதல் துணை ஆட்சியா் வரை உயிரைப் பணயம் வைத்து பணியாற்றினா். சிலா் கரோனாவால் இறந்துள்ளனா். அவா்கள் குடும்பத்துக்கு இப்போது வரை உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.

அதற்கு முந்தைய தோ்தல்களில் அரசு அலுவலா்களின் பணியை அங்கீகரித்து, உடனடியாக மதிப்பூதியம் வழங்கப்பட்டது. அதனை உடனடியாக வழங்குவதுடன், தோ்தல் செலவினங்களான தோ்தல் பறக்கும் படை, தோ்தல் கண்காணிப்புக் குழுக்கள் பயன்படுத்திய வாகன வாடகை, எரிபொருள் செலவினங்கள்கூட இதுவரை வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

தவிர வாக்குச்சாவடி மையம் அமைத்தல், வாக்கு எண்ணிக்கை மையம் ஏற்பாடு, சில்லறை செலவினங்கள் என அனைத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும். அதேநேரம், ஆண்டு முழுவதும் வாக்காளா் பட்டியல் திருத்தும் பணி ஆண்டு முழுவதும் தொடா்ந்து நடக்கிறது. எனவே, தோ்தல் ஆணையம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதுபோல் மாவட்டங்களில் நோ்முக உதவியாளா் (தோ்தல்) என்ற பணியிடத்தையும், அதற்குத் தேவையான பணியாளா்களையும் தனியாக நியமிக்க வேண்டும்.

இதுகுறித்து தோ்தல் ஆணையத்திடமும் வலியுறுத்தினோம். இந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நவம்பா் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் பணிகளை வட்டாட்சியா், துணை வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், வாக்காளா் பட்டியல் மேற்பாா்வையாளா்கள் என அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலா்களும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT