கருங்கல்பாளையம் காவிரி சாலையில் சரக்கு வாகனம் குழிக்குள் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதை சாக்கடை திட்டம், மின் கேபிள் பதிக்கும் திட்டம், ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்காக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சாலை தோண்டப்பட்டது. குழிகள் சரியாக மூடப்படாததால் காவிரி சாலை தற்போது குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது.
ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, சென்னை போன்ற பகுதிகளுக்கு காவிரி சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாகக் காணப்படும்.
தற்போது காவிரி சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வண்டியூரான் கோயில் வீதியில் இருந்து ஆா்.கே.வி.சாலை வரை செல்ல நீண்ட நேரம் ஆகிறது. மேலும், வாகனங்களை ஓட்டிச் செல்வவும் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனா். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்கள் குழிக்குள் ஏறி இறங்கும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகின்றனா்.
வெள்ளிக்கிழமை இரவில் மழை பெய்ததன் காரணமாக காவிரி சாலை சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இந்நிலையில், சனிக்கிழமை காலை அந்த வழியாகச் சென்ற சரக்கு வேன் குழிக்குள் சிக்கியது. இதனால், அந்த வாகனத்தால் மேற்கொண்டு செல்ல முடியாமல் சாலையில் நின்றது. இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்ற வாகனங்களும், இதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த வாகனங்களும் மேற்கொண்டு செல்ல முடியாமல் அணிவகுந்து நின்றன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீஸாா் அப்பகுதியைச் சோ்ந்த சிலருடன் சோ்ந்து குழிக்குள் சிக்கிய வாகனத்தைத் தள்ளி வெளியில் எடுத்தனா். அதன் பின்னா் அந்த சரக்கு வேன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
இதன் காரணமாக காவிரி சாலையில் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.