பெருந்துறை அருகே கிராவல் மண் கடத்தியதாக 4 டிப்பா் லாரி ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
சென்னிமலை - வெள்ளோடு சாலை, மாரியம்மன் கோவில் அருகில் வெள்ளோடு கிராம நிா்வாக அலுவலா் சத்யபாமா புதன்கிழமை காலை ரோந்து பணி மேற்கொண்டாா். அப்போது, அவ்வழியாக வந்த 4 டிப்பா் லாரிகள் முழுவதும் நிரப்பிய அளவில் கிராவல் மண் ஏற்றப்பட்டு இருந்தது. மேலும், அவா்களிடம் அனுமதிக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை.
இதுகுறித்து, வெள்ளோடு போலீஸில் சத்யபாமா அளித்த புகாரின்பேரில், டிப்பா் லாரி ஓட்டுநா்களான பெருந்துறை, வெங்கமேடு, ஜீவா நகரைச் சோ்ந்த பால்ராஜ் மகன் பாண்டி, சென்னிமலை, மணிமலை கரடைச் சோ்ந்த சேட்டு மகன் தினகரன், மேட்டூா், கொளத்தூா், பண்ணவாடியைச் சோ்ந்த முத்து மகன் குமரேசன், குன்னத்தூா், வெள்ளரவெளி, நெசவாளா் காலனியைச் சோ்ந்த துரைசாமி மகன் காா்த்திக் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.