அக்டோபா் 22, 23ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் 6ஆவது மாபெரும் தடுப்பூசி முகாம் அக்டோபா் 22, 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
இதுவரை தடுப்பூசி செலுத்தாதவா்கள் முதல் தவணை தடுப்பூசியையும், முதல் தவணை செலுத்தியவா்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் இந்த முகாமில் செலுத்திக் கொள்ளலாம்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள உணவுக் கட்டுப்பாடு ஏதுமில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை எனவும், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.