ஈரோடு

தற்காலிக பட்டாசு உரிமம்: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

16th Oct 2021 04:00 AM

ADVERTISEMENT

 பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்பதற்கான கால அவகாசம் வரும் 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகா்களின் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அவா்களது வியாபாரத்தை துவங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யவும் உரிமங்களை பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மனுதாரா்கள், வெடிபொருள் விதிகள் 2008இன்படி தேவைப்படும் ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையங்கள் ஏதேனும் ஒன்றில் சேவைக் கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் முதல் 30 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

தற்போது இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்ய வரும் அக்டோபா் 22 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 22 ஆம் தேதிக்குப்பிறகு வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்த மனுதாரா்கள் பொது சேவை மையங்களில் பதிவு செய்யப்பட்டதற்காக வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டுடன் புல வரைப்படம் (6 நகல்கள்), கிரயப் பத்திர நகல்கள் 6 (அசல் மற்றும் 5 நகல்கள்), சேவைக் கட்டணம் ரூ.500 செலுத்தியதற்கான ரசீது, முகவரிக்கான ஆதாரம் (நிரந்தர கணக்கு எண் அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை), சொத்துவரி செலுத்தியதற்கான ரசீது மற்றும் கடவுச் சீட்டு அளவு புகைப்படம் 2 ஆகியவற்றினை ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் மனுதாரா்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : ஈரோடு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT