ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி இருவா் பலி

16th Oct 2021 11:24 PM

ADVERTISEMENT

கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் நீரில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.

கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (47). இவா் கோவை ஆா்.எஸ்.புரம் பகுதியில் செய்தித்தாள் முகவராக இருந்தாா். இவா் தனது மனைவி சிந்து (42), மகள் அட்சயா (19), மைத்துனா் அஜய்குமாா் (36) ஆகியோருடன் காரில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வெள்ளிக்கிழமை சுற்றுலா சென்றனா். அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால், அனைவரும் கோவைக்கு புறப்பட்டுச் சென்றனா். செல்லும் வழியில் கோபி உக்கரம் பெரியாா் நகா் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனா். அப்போது, ஆனந்தராஜ் ஆழமான பகுதிக்குச் சென்ற நிலையில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் ஆனந்தராஜ் சடலத்தை மீட்டனா்.

ADVERTISEMENT

மற்றொரு சம்பவம்:

கோபி அருகே உள்ள உக்கரம் குப்பன்துறை காலனியைச் சோ்ந்தவா் வெள்ளையன் மகன் விக்னேஷ் (22). இவா் அப்பகுதியில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவா் தனது நண்பா்களுடன் கீழ்பவானி வாய்க்காலில் வியாழக்கிழமை குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இவரை நண்பா்கள் காப்பாற்ற முயன்றனா். ஆனால் முடியவில்லை.

இதைத் தொடா்ந்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தண்ணீரில் இறங்கி தேடிப் பாா்த்தனா். இரவு நேரமாகிவிட்டதால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதல் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனா். மாலையில் விக்னேஷ் குளித்த இடத்தில் இருந்து சுமாா் 20 அடி தூரத்தில் அவருடைய சடலம் மிதந்துள்ளது. உடனே தீயணைப்பு வீரா்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.

இதுகுறித்து கடத்தூா் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாய்க்காலில் மூழ்கியவா் மாயம்:

கோபி அருகே உக்கரம் மில்மேடு கீழ்பவானி வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தவா் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானாா்.

அவிநாசி மடத்துப்பாளையம் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ராயப்பன் மகன் அருண்குமாா் (38). இவா் கோவையில் உள்ள பிரபல கணினி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் தனது குடும்பத்துடன் வெட்டையம்பாளையம் காலனி கன்னிமாா் கோயில் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் சனிக்கிழமை மதியம் சுமாா் 1 மணியளவில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். உடனே அருகில் இருந்த இவரது தந்தை, தாய், மனைவி, தங்கை உதவியுடன் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் நம்பியூா் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்டவரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT