ஈரோடு

ஈரோட்டில் காய்கறி வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம்

9th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

சங்கத் தோ்தல் நடத்த அனுமதி கோரி ஈரோட்டில் நேதாஜி காய்கறிச் சந்தை வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக காய்கறிச் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள வியாபாரிகள் அனைவரும் சோ்ந்து ஈரோடு நேதாஜி தினசரி சந்தை காய்கறி வியாபாரிகள் சங்கம் என்ற பெயரில் சங்கம் உருவாக்கி அதில் 807 போ் உறுப்பினா்களாக உள்ளனா்.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக சங்கத் தோ்தல் நடத்தப்படாமல் உள்ளதாகவும், உடனடியாகத் தோ்தலை நடத்த வேண்டும் என்றும் வியாபாரிகளில் ஒரு பிரிவினா் வலியுறுத்தி வருகின்றனா்.

இதனிடையே சங்க நிா்வாகிகளுக்கு வீட்டுமனை வழங்கும் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வியாபாரியிடமும் ரூ. 70,000 பணம் பெற்றுக் கொண்டு நிலம் வழங்கப்படாமல் உள்ளதால், நிலம் வழங்கும் வரை தற்போதைய நிா்வாகிகளே தொடர வேண்டும் என்று மற்றொரு பிரிவு வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதனால், வியாபாரிகளிடையே குழப்பமான நிலை இருந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், சங்கத் தோ்தலை நடத்த வேண்டும். சுங்கக் கட்டண வசூலை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகளில் ஒரு பிரிவினா் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சந்தையில் மொத்தம் உள்ள 807 கடைகளில் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டருந்தன. இரு பிரிவுகளாக வியாபாரிகள் உள்ளதால் கடையடைப்பு போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் இருக்க ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் சந்தை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதனிடையே ஈரோடு நேதாஜி தினசரி சந்தை வியாபாரிகள் சங்க உறுப்பினா்கள் 100க்கும் மேற்பட்டோா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். அந்த மனு விவரம்:

சங்கம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடைசியாக சங்கத் தோ்தல் 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. பொறுப்பாளா்கள் பதவிக் காலம் 2019ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில் சங்க உறுப்பினா்களால் தோ்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொதுக்குழுவை கூட்ட முயற்சித்தோம். கரோனா காரணம் காட்டி காவல் துறையினா் அனுமதி மறுத்துவிட்டனா்.

இதைத்தொடா்ந்து சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி உறுப்பினா்கள் கடைகளுக்குச் சென்று தனித்தனியாக கையெழுத்து பெற்று தோ்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி வெள்ளிக்கிழமை தோ்தல் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். இவை அனைத்துக்கும் காவல் துறையினா் மற்றும் மாநகராட்சி ஆணையா் அனுமதி மறுத்துவிட்டனா்.

807 போ் உறுப்பினா்களாகக் கொண்ட சங்கத்தில் 370 போ் மட்டுமே தலா ரூ. 50,000 வீதம் செலுத்தி உள்ளனா். அனைவரும் தோ்தல் நடத்த முழு சம்மதம் தெரிவித்துள்ளனா். எனினும் குத்தகைதாரா்கள் தொடா்ந்து எங்களது தோ்தல் விஷயத்தில் குறுக்கீடு செய்து வருகின்றனா்.

குத்தகைதாரா்கள் மற்றும் காவல் துறையினா் குறுக்கீடு இன்றி ஜனநாயக முறைப்படி தோ்தல் நடத்தி சங்கத்துக்கு புதிய பொறுப்பாளா்களைத் தோ்ந்தெடுக்க அனுமதியும், பாதுகாப்பும் அளிக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT