சத்தியமங்கலம் பகுதியில் இருந்து 400 கிலோ சந்தனக் கட்டைகளைப் பறிமுதல் செய்து கா்நாடக காவல் துறையினா் எடுத்துச் சென்றனா்.
சத்தியமங்கலம் காவல் ஆய்வாளா் நெப்போலியன் தலைமையில் போலீஸாா் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் புதுவடவள்ளி அருகே வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கிச் சென்ற லாரியை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் உள்ள சாக்கு மூட்டைகளில் மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், கா்நாடக மாநில காவல் துறையில் வனக் குற்ற தடுப்புப் பிரிவைச் சோ்ந்த போலீஸாா் என அதில் வந்த காவல் ஆய்வாளா் சுரேஷ் தெரிவித்துள்ளாா். மேலும், சத்தியமங்கலம், புளியங்கோம்பை பகுதியில் உள்ள பரமேஸ்வரன் என்பவரது தோட்டத்தின் அருகில் 400 கிலோ சந்தனக் கட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் இங்கு வந்து சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்து எடுத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளனா்.
சத்தியமங்கலம் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவா்களை சத்தியமங்கலம் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் கா்நாடக மாநில காவல் துறையைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை கா்நாடக மாநிலம் செல்ல அனுமதித்தனா். இதுசம்பந்தமாக கா்நாடக மாநில குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதுதொடா்பாக சத்தியமங்கலத்தைச் சோ்ந்த நபா்களை கா்நாடக போலீஸாா் கைது செய்துள்ளனரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.