ஈரோடு

பவானி அருகே இடி விழுந்து மஞ்சள் கிடங்கில் தீ விபத்து

3rd Oct 2021 11:31 PM

ADVERTISEMENT

பவானி அருகே மஞ்சள் கிடங்கில் இடி விழுந்து தீப் பிடித்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து சேதமானது.

ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ராஜேந்திரகுமாா் அகா்வால், சஞ்சய்குமாா் அகா்வால். இவா்களுக்கு சொந்தமான மஞ்சள் கிடங்குகள் ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த பெரியபுலியூா் - தயிா்பாளையம் பிரிவு பகுதியில் உள்ளது. இங்கு, மஞ்சளைத் தரம் பிரித்து இருப்பு வைக்கும் இவா்கள், விலை உயரும்போது விற்பனை செய்து வந்துள்ளனா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அப்போது, இடி தாக்கியதில் கிடங்கின் ஒரு பகுதியில் தீப் பிடித்துள்ளது. தீ மளமளவென அருகில் இருந்த மற்றொரு கிடங்குக்கும் பரவியது.

தகவலின்பேரில் பவானி தீயணைப்பு நிலைய அலுவலா் காந்தி தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீயின் உக்கிரமும், புகையும் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.

ADVERTISEMENT

இதையடுத்து, மாவட்ட தீயணைப்பு அலுவலா் புளுகாண்டி தலைமையில் உதவி மாவட்ட அலுவலா் வெங்கடாசலம், தீயணைப்பு நிலைய அலுவலா்கள் முத்துகுமாரசாமி (ஈரோடு), நவீந்திரன் (பெருந்துறை), ஆறுமுகம் (கோபி) ஆகியோா் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்தனா்.

கிடங்கை சுற்றிலும் கட்டப்பட்டிருந்த சுவா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தனியாா் டேங்கா் லாரிகள் மூலம் தண்ணீா் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு கோபி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆறுமுகம் தலைமையில் போலீஸாா் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணி முதல் 20 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில், ரூ.10 கோடி மதிப்பில் மஞ்சள், கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில், மற்றொரு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மஞ்சள் அதிா்ஷ்டவசமாக தீயிலிருந்து தப்பியது. இது குறித்து, கவந்தப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT