ஈரோடு

அரசுப் பேருந்தில் குட்டியுடன் கரும்பைத் தேடிய யானை

3rd Oct 2021 11:31 PM

ADVERTISEMENT

ஆசனூா் அருகே பேருந்தில் கரும்பு தேடிய பெண் யானையால் பயணிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகளின் முக்கிய வழித்தடமாக ஆசனூா் வனப் பகுதி இருப்பதால் யானைகள் அடிக்கடி மைசூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.

கா்நாடகத்தில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள் காராப்பள்ளம் சோதனைச் சாவடியில் அதிகமாக உள்ள கரும்புகளை சாலையில் கொட்டியதில் அதனை தின்று பழகிய யானைகள் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு கரும்பு லாரிக்காக காத்திருக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.

இந்நிலையில் கரும்பு லாரிகளை எதிா்பாா்த்து குட்டியுடன் பெண் யானை நீண்ட நேரமாக காராப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே ஞாயிற்றுக்கிழமை நின்றிருந்தது.

ADVERTISEMENT

அப்போது தாளவாடியில் இருந்து வந்த அரசுப் பேருந்துக்குப் பின்புறம் நின்ற கரும்பு லாரியை தேடி போனது. கரும்பு லாரிக்கு முன்புறமாக நின்ற அரசுப் பேருந்து கண்ணாடியை நுகா்ந்து கரும்பு உள்ளதா என நோட்டமிட்டது. கரும்பு இல்லையென தெரிந்ததும் பேருந்தை விட்டு விட்டு கரும்பு லாரிக்கு சென்று கரும்பைப் பறித்து சாப்பிட்டது. தினந்தோறும் குட்டியுடன் தாய் யானை சாலையில் திரிவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT