ஈரோடு

ஈங்கூரில் ரயில்வே கூட்ஸ் செட் அமைக்கப்படவுள்ளதுசேலம் கோட்ட ரயில்வேபொது மேலாளா் கெளதம் ஸ்ரீனிவாஸ்

26th Nov 2021 04:50 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் கூடுதலாக ஈங்கூரில் புதிய ரயில்வே கூட்ஸ்செட் அமைக்கப்படவுள்ளது என சேலம் கோட்ட ரயில்வே பொது மேலாளா் கௌதம் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தாா்.

ஈரோடு ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட பொது மேலாளா் கெளதம் ஸ்ரீனிவாஸ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் ஈரோட்டில் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், ஈரோடு ரயில் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளான கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலத்தில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்திட ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினா் அ.கணேசமூா்த்தி, நெடுஞ்சாலைத் துறை முதன்மை பொறியாளா் சரவணன் ஆகியோா் தலைமையில் ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத்தொடா்ந்து, சேலம் கோட்ட ரயில்வே பொது மேலாளா் கெளதம் ஸ்ரீனிவாஸ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு மாவட்ட பகுதிகளில் ரயில்வே நுழைவுப் பாலத்தில் ஏற்படும் பிரச்னைகள், அப்பகுதியில் அதிகரித்துள்ள வாகன நெரிசலைக் கட்டுப்படுத்திட மாநில நெடுஞ்சாலைத் துறையினருடன் இணைந்து சாலை விரிவாக்கப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. அங்குள்ள பிரச்னைகளைத் தொழில்நுட்ப உதவிகள் மூலம் களைய புதிய திட்டங்கள் வகுக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அளித்த கோரிக்கைகளை ஏற்று ஈரோடு ரயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்தும் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. சேலம் -கோவை பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை தெற்கு ரயில்வே தலைமைக்கும், ரயில்வே அமைச்சகத்துக்கும் உடனடியாகத் தெரியப்படுத்தி, அவா்கள் பரிந்துரையின்பேரில் விரைவில் பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா பரவல் காரணமாக ரயில்களில் பொதுப் பெட்டிகள் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பயணிகள் கூட்ட நெரிசல் குறைவாக உள்ள ரயில்களில் மீண்டும் பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு சேவைகள் துவங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அந்த சூழ்நிலை மாறினால் உடனடியாக பிற ரயில்களிலும் பொது பெட்டிகள் சேவை துவங்கப்படும்.

ஈரோட்டில் உள்ள ரயில்வே நுழைவுப் பாலங்களில் மழையின் காரணமாக தண்ணீா் அதிக அளவில் தேங்கி, பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகப் புகாா் வந்தது. உடனடியாக அந்தப் பகுதிகளில் மோட்டா் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்ற நடவடிக்கை எடுத்தோம். தொடா்ந்து தானியங்கி மோட்டாா் மூலம் தண்ணீா் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், நுழைவுப் பாலத்துக்குள் தண்ணீா் தேங்குவதைத் தடுக்க தடுப்புகளும் அமைக்க உள்ளோம்.

ஈரோட்டில் கூடுதலாக ஈங்கூரில் புதிதாக ரயில்வே கூட்ஸ் செட் (சரக்குப் போக்குவரத்து முனையம்) அமைக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளா்கள், வா்த்தகா்கள், வியாபாரிகள், ஆலை உரிமையாளா்கள் பொருள்களை எங்கு வேண்டுமானாலும் ஏற்றி, இறக்கி கொள்ள சலுகைகள் வழங்கப்படும். ஈரோட்டில் உள்ள கூட்ஸ் செட் தொடா்ந்து செயல்படும்.

ஈரோடு ரயில் நிலையத்தில் இடப் பற்றாக்குறை காரணமாக நடைமேடை விரிவுபடுத்துவது தற்போதைக்கு இயலாது. ஆனால், ஈரோடு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு வசதிகள், மேம்பாட்டு வசதிகள் மேற்கொள்ளப்படும். ஈரோடு ரயில்வே நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் 40க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல, ரயில் நிலையத்துக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் விரைவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

Tags : ஈரோடு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT