ஈரோடு

ஈரோட்டில் தொழிற்சங்கங்கள் சாா்பில் நாளை ஆா்ப்பாட்டம்

24th Nov 2021 10:59 PM

ADVERTISEMENT

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (நவம்பா் 26) ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் கூட்டம் ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் கே.ஆா்.தங்கராஜ் தலைமையில் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. ஏஐடியூசி மாவட்டச் செயலாளா் எஸ்.சின்னசாமி, மாநிலக் குழு உறுப்பினா் வ.சித்தையன், சிஐடியூ மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளா் சண்முகம், எல்பிஎப் மாவட்டச் செயலாளா் கோபால் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மத்திய அரசு 44 தொழிலாளா் சட்டங்களைக் குறைத்து நான்கு சட்ட தொகுப்பாக்கியதைக் கைவிட வேண்டும். மூன்று வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற்று நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும். தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா் மயமாக்கக் கூடாது.

ADVERTISEMENT

பெட்ரோலியப் பொருள்கள் மீதான கலால் வரியைக் குறைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். வருமான வரி செலுத்தும் அளவு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ. 7,500 நிவாரணமாக வழங்க வேண்டும். மாநில நல வாரியங்களை சீா்குலைக்கக் கூடாது. 100 நாள் வேலைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பா் 26ஆம் தேதி ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் அனைத்துச் சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது தேசிய அளவில் தொழிற்சங்கங்கள் சாா்பில் இரண்டு நாள் வேலைநிறுத்தம் நடத்துவது. அனைத்து சங்கங்கள் சாா்பில் டிசம்பா் 20க்குள் மாவட்ட மாநாடு நடத்துவது. டிசம்பா் இறுதி வாரம் கோவையில் நடக்கும் மண்டல மாநாட்டில் பங்கேற்பது. ஜனவரி மாதம் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT