ஈரோடு

கரோனா காலத்தில் கோவை கோட்டத்தில் 15 லட்சம் டன் அரிசி, கோதுமை விநியோகம்

23rd Nov 2021 11:14 PM

ADVERTISEMENT

கரோனா முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட காலத்தில் ஈரோடு உள்பட 9 மாவட்டங்களில் பொதுமக்களுக்கு 15 லட்சம் டன் அரிசி, கோதுமை விநியோகம் செய்யப்பட்டுள்ளது என இந்திய உணவுக் கழகத்தின் கோவை கோட்ட மேலாளா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் ஆசாதி கா அம்ருத் மகோத்சவ் திட்டத்தின்கீழ் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் தொடா்ச்சியாக, ஐகானிக் எனும் வார விழா இந்திய உணவுக் கழகம் சாா்பில் ஈரோடு மத்திய சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்திய உணவுக் கழகத்தின் கோவை கோட்ட மேலாளா் என்.ராஜேஷ் பேசியதாவது:

இந்திய உணவுக் கழகம் சாா்பில் நாடு முழுவதும் உணவு தானியங்கள் கொள்முதல், சேமித்தல், விநியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது விநியோக முறைகள், மதிய உணவு வழங்குதல், அன்னபூா்ணா தொண்டு நிறுவனங்கள், விடுதிகள் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

கோவை கோட்டத்தில் கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு, கரூா், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களில் அரிசி, கோதுமை விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் 58,44,296 குடும்ப அட்டைகளில் உள்ள 1.77 கோடி போ் பயன்பெறுகின்றனா்.

கரோனா காலத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க உணவுப் பாதுகாப்பு நலத் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், குடும்ப அட்டைகளில் உள்ள நபா் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்பட்டது. இதில், கோவை கோட்டத்தில் உள்ள 9 மாவட்டங்களில் 6,02,600 டன் அரிசியும், 37,688 டன் கோதுமையும் வழங்கப்பட்டது. மேலும், 2021ஆம் ஆண்டில் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது விநியோக முறை திட்டத்தின்கீழ் 8,69,937 டன் அரிசி, கோதுமை வழங்கப்பட்டது. கரோனா முழு முடக்க காலத்தில் மொத்தம் 15,10,225 டன் அரிசி, கோதுமை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சகம் சாா்பில் குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு ரத்த சோகை, நுண்ணூட்டச் சத்து குறைபாட்டைப் போக்கும் வகையில் வலுவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது. இந்த அரிசியில் போலிக் அமிலம், இரும்புச் சத்து, வைட்டமின் பி-12 ஆகிய நுண்ணூட்டச் சத்துகள் உள்ளன. 9 மாவட்டங்களுக்கு 1,663 டன் அரிசி வழங்கப்பட்டது என்றாா்.

இதில், மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சி.சரவஸ்வதி, மத்திய சேமிப்புக் கிடங்கு மேலாளா்கள் ஆனந்த், கணேஷ், சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT