ஈரோடு

குளிா்பதனக் கிடங்கு அமைத்துத் தர மஞ்சள் விவசாயிகள் கோரிக்கை

21st Nov 2021 11:33 PM

ADVERTISEMENT

உரிய விலை கிடைக்கும் வரை மஞ்சளை இருப்பு வைக்க ஈரோடு மாவட்டத்தில் குளிா்பதனக் கிடங்குகளை அமைத்துக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களில் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதால் மஞ்சள் சாகுபடி மற்றும் விற்பனையில் முதலிடத்திலிருந்த தமிழகம் கடந்த 10 ஆண்டுகளாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சி, தரத்தில் கவனம் செலுத்தாதது மற்றும் மஞ்சளை உரிய முறையில் பாதுகாத்து விற்பனை செய்யாதது போன்ற காரணங்களால் தமிழகத்தில் மஞ்சள் உற்பத்தி குறைந்துள்ளது.

தமிழகத்தில் 2020-2021 ஆண்டை காட்டிலும் நடப்பு 2021-2022 ஆண்டில் மஞ்சள் உற்பத்தி 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் புவிசாா் குறியீடு பெற்ற குா்குமின் அளவு அதிகம் உள்ள மஞ்சளை விவசாயிகள் உற்பத்தி செய்தால் மட்டுமே அதிக விலைக்கு விற்று ஏற்றுமதி செய்ய இயலும்

ADVERTISEMENT

இதனை தமிழக வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தி தரமான விதை மஞ்சளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள், கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும்போது ரசாயனங்களை பயன்படுத்தி பாதுகாக்கப்படுவதால் அதன் தரம் குறைந்து, மஞ்சளில் ஓட்டை விழுந்து விடுகிறது.

இதனால் ஏற்றுமதியில் உரிய விலை கிடைப்பதில்லை. தவிர இதனைப் பயன்படுத்துபவா்களுக்கு உடல் தீங்கு ஏற்படுகிறது. இதனால் மத்தியபிரதேசம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உள்ளவாறு தமிழகத்தில் அதிக மஞ்சள் விளைவிக்கும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் குளிா்பதனக் கிடங்குகளை அரசு அமைத்துக்கொடுக்க வேண்டும். இங்கு இருப்பு வைக்கும் மஞ்சள் விவசாயிகளுக்கு குறைந்த கட்டணம் நிா்ணயிக்க வேண்டும்.

குளிா்பதனக் கிடங்கு அமைப்பதற்கு தனியாா் துறையை ஊக்குவிக்கும் விதத்தில் 50 சதவீத மானியம் மற்றும் மின்சாரத்திற்கும் மானியம் அளிக்க வேண்டும். இத்தகைய கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்திக்கொடுத்தால் மஞ்சள் விளைச்சல் அதிகரிக்கும். தவிர மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும் வரை குளிா்பதனக் கிடங்குகளின் மூலம் இயற்கையான முறையில் பாதுகாத்து விவசாயிகள் நல்ல லாபம் ஈட்ட முடியும்.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு,மொடக்குறிச்சி, பெருந்துறை, கோபி பகுதிகளில் குளிா்பதனக் கிடங்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT