ஈரோடு

குளம், ஓடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

21st Nov 2021 11:31 PM

ADVERTISEMENT

பெருந்துறை, நவ. 21: சென்னிமலை ஒன்றியத்தில் குளம், ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் மனு அளிக்கப்பட்டது.

சென்னிமலை ஒன்றியம், முருங்கத்தொழுவு ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் தல மரம் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஈரோடு மக்களவை உறுப்பினா் கணேசமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா். அப்போது, சட்டவிரோத கல்குவாரி எதிா்ப்பு இயக்கம் சாா்பாக மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

சென்னிமலை ஒன்றியம், எக்கட்டாம்பாளையம் ஊராட்சியில் ஆண்டிகாட்டு குளம் உள்ளது. சில்லாங்காட்டுவலசு, வெப்பிலி, அய்யம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 200 ஏக்கா் விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த குளத்தை தனியாா் கல்குவாரி உரிமையாளா்கள் ஆக்கிரமித்துள்ளனா்.

அதேபோல, சென்னிமலை, மலையின் தென்புற அடிவாரப் பகுதிகளில் உருவாகி உள்ள ஓடைகளையும் கல் குவாரி உரிமையாளா்கள் ஆக்கிரமித்தும், தடுத்தும், உடைத்தும் வருகின்றனா். எனவே மேற்கண்ட நீா்நிலைகளை ஆக்கிரமித்துள்ள நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து குளம், ஓடைகளை பாதுகாத்து தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT