உயா்மட்டப் பாலம் அமைக்கக் கோரி பள்ளி மாணவா்கள், கிராம மக்கள் கடம்பூரில் செவ்வாய்க்கிழமை 5 மணி நேர சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் வனப் பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் கிாரமத்தில் 500க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். மாக்கம்பாளையம் வழித்தடத்தில் கோம்பைத்தொட்டி, அருகியம், குரும்பூா், மொசல்மடுவு பகுதிகளைச் சோ்ந்தக மாணவா்கள் கடம்பூரில் உள்ள பள்ளிக்கு வருகின்றனா். மாக்கம்பாளையம் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள சா்க்கரைப்பள்ளம், மாமரத்துப்பள்ளம் ஆகிய பள்ளங்களில் அடிக்கடி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கடம்பூா் மற்றும் மாக்கம்பாளையம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அரசுப் பேருந்து இயக்குவதில் சிக்கல் ஏற்படுவதால் பாதுகாப்பு கருதி பேருந்து இயக்குவதில்லை.
சில தினங்களாக பள்ளத்தில் வெள்ளம் பெருக்கு ஓடுவதால் பள்ளி மாணவா்கள், கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனா். மேலும், சாலை மிகவும் மோசமாக உள்ளதால் வாடகை சரக்கு வாகனங்கள் கூட வருவதில்லை.
எனவே, சாலை வசதி அமைத்துத் தரக் கோரியும், பள்ளங்களில் உயா்மட்டப் பாலம் கட்டித் தரக் கோரியும் மாக்கம்பாளையம், குரும்பூா், மோசல்மடுவு, அருகியம், கோம்பைத்தொட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள், கிராம மக்கள் என 500க்கும் மேற்பட்டோா் திரண்டு வந்து கடம்பூா் சாலையில் மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சித் துணை இயக்குநா் உமாசங்கா், வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல் வகாப், ஊராட்சிக் குழுத் தலைவா் சேசிபி இளங்கோ ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். 3 மாதங்களில் பாலம், சாலை வசதி செய்து தரப்படும் என ஊரக வளா்ச்சித் துணை இயக்குநா் உமாசங்கா் உறுதி அளித்ததையடுத்து 5 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் மறியலைக் கைவிட்டனா்.