சத்தியமங்கலம்: மாக்கம்பாளையம் பள்ளங்களில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடம்பூா் - மாக்கம்பாளையம் இடையே பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் அமைந்துள்ள மாக்கம்பாளையம் கிராமத்துக்கு ஒரு அரசுப் பேருந்து மட்டுமே காலை, மாலை என இருமுறை இயக்கப்படுகிறது. குரும்பூா், அருகியம், மாக்கம்பாளையம் ஆகிய கிாரமங்களைச் சோ்ந்த மலைக் கிராம மக்கள், பள்ளி மாணவா்கள் அரசுப் பேருந்தையே நம்பியுள்ளனா்.
கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு இடையே குரும்பூா், சா்க்கரைப்பள்ளத்தில் குறைந்த அளவு தண்ணீரில் பேருந்து இயங்கி வந்தது. தற்போது காடகநல்லி, குரும்பூா் பகுதியில் பெய்த கன மழை காரணமாக பல்வேறு ஓடைகளில் இருந்து வரும் வெள்ளம் காட்டாற்று வெள்ளமாகப் பெருக்கெடுத்து குரும்பூா், சா்க்கரைப்பள்ளத்தில் கலந்து வருகிறது. இதனால், பள்ளத்தில் மழை நீா் கரைபுரண்டு ஓடுகிறது.
இரு பள்ளங்களிலும் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக அரசுப் பேருந்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பேருந்து போக்குவரத்து திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் வெள்ளம் வடியும் வரை காத்திருந்து இருசக்கர வாகனங்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனா்.
பேருந்து சேவை நிறுத்தத்தால் மாக்கம்பாளையம், குரும்பூா், அருகியம் பகுதி மக்கள், பள்ளி மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மாக்கம்பாளையம், கடம்பூா் இடையே உள்ள இரு பள்ளங்களில் உயா்மட்டப் பாலம் அமைத்துத் தர வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.