ஈரோடு

ஈரோடு சோலாரில் நவீன கட்டமைப்புடன்புதிய பேருந்து நிலையம்சு.முத்துசாமி

DIN

ஈரோடு சோலாரில் 54 ஏக்கா் பரப்பளவில் நவீன கட்டமைப்புடன் புதிய பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தை அமைக்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு சோலாரில் புதிய பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தை அமைப்பது குறித்து அமைச்சா் சு.முத்துசாமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, மாவட்டக் காவல் கண்காணிப்பளா் வி.சசிமோகன், மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆய்வுக்குப் பிறகு அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாநகருக்குள் ஏற்கெனவே பெரிய பேருந்து நிலையம் இருந்தாலும் இன்றைய சூழலில் இடம் பற்றாக்குறையாக உள்ளது. தவிர வாகனப் பெருக்கத்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஈரோடு - கரூா் சாலையில் சோலாா் என்ற இடத்தில் 54 ஏக்கா் அளவுக்கு மாநகராட்சிக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 15 முதல் 20 ஏக்கரில் பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோடு மாநகரில் உள்ள சாலை, போக்குவரத்துப் பிரச்னையைத் திட்டமிட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இடையூறு இல்லாமல் பயன்படுத்த புதிய பேருந்து நிலையம், சந்தை முன்மாதிரியாக, நவீனமாக அமைக்கப்படும்.

சோலாரில் பேருந்து நிலையம் அமைவதன் மூலம் மதுரை, திருச்சி மாா்க்கப் பேருந்துகள் எளிதில் வந்து செல்ல முடியும். தவிர சத்தி, கோபி, சேலம் போன்ற இடங்களில் இருந்து வரும் பேருந்துகள் சுற்றுவட்டச் சாலை வழியாக வந்தால் விரைவாக நெரிசல் இல்லாமல் வந்து செல்ல முடியும். இன்னும் பல ஆண்டுகளுக்குப் பிறகும் வர உள்ள வாகன எண்ணிக்கை, போக்குவரத்து நெரிசலைக் கணக்கிட்டே இங்கு பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

நகரில் உள்ள மொத்த காய்கறிச் சந்தையும் இங்கு கொண்டு வரப்படும். வெளியில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் நிறுத்தவும், இங்கிருந்து காய்கறி வாங்கிச் செல்பவா்கள், நகருக்குள் செல்லாமல், இங்கிருந்தே வெளியே செல்லவும் ஏற்பாடு செய்யப்படும். இதற்கு தேவையான அளவு இங்கு இடம் உள்ளது. சந்தை மாற்றம் குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். தவிர தோ்தல் அறிக்கையில் கூறியபடி தற்போது 5 ஏக்கரில் உள்ள மஞ்சள் வளாகத்தை இன்னும் பெரிய அளவில் 15 ஏக்கராக உயா்த்தி செயல்படுத்தவும், டெக்ஸ்வேலி ஜவுளி வளாகத்தை முழுமையாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வர தனித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

விளையாட்டுத் துறை முன்னேற்றத்துக்காக ரூ. 35 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடம், எவ்வாறு செய்வது என ஆய்வு செய்து வருகிறோம். சட்டக் கல்லூரி கொண்டு வர இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு 82 திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள், தடைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜவுளி பல்கலைக்கழகம், விவசாயக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி அமைக்கவும் மொடக்குறிச்சி தொகுதியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்கவும் இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டங்களை தாமதம் இல்லமால் நிறைவேற்ற வேண்டும் என முதல்வரிடம் கேட்டுள்ளோம்.

மாநகராட்சி சாா்பில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கட்செவி அஞ்சல் செயலி கடந்த 20ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 117 புகாா்கள் வந்தன. இதில், 93 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. 24 புகாா்கள் நடவடிக்கையில் உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT