ஈரோடு

கோபி அருகே சாலை விபத்து: ஒருவா் பலி

29th Jul 2021 07:11 AM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

கோபி அருகே உள்ள கவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் கணேசன் (25), கூலி தொழிலாளி. இவரது மனைவி பெயா் மனோன்மணி (22). இவா்களுக்கு சஞ்சய் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், கணேசன் தனது மனைவி, குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை கோபிக்குச் சென்றுள்ளாா். பின்னா், இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, குள்ளம்பாளையம் பிரிவு அருகே பின்புறமாக தொழிலாளா்களை ஏற்றி வந்த தனியாா் தொழிற்சாலை வேன் இவா்களது இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் மனோன்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அக்கம்பக்கத்தினா் கணேசன், குழந்தையை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதற்கிடையே அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து விபத்தை ஏற்படுத்திய வேனின் மீது கற்களை வீசித் தாக்கினா். இதில் வேனின் கண்ணாடிகள் நொறுங்கின. இச்சம்பவத்தில் வேனில் இருந்த தொழிலாளா்கள் காயமின்றி உயிா்தப்பினா். இதையறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மனோன்மணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT