ஈரோடு

பவானி சங்கமேஸ்வரர் கோயில் திருத்தேர் வெள்ளோட்டம்

22nd Feb 2021 12:34 PM

ADVERTISEMENT

பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் பல்வேறு அலங்கார வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட புதிய தேர் திங்கள்கிழமை வெள்ளோட்டம் விடப்பட்டது.

மிகப்பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு சொந்தமான சட்டத் தேர் திருவிழாக்காலங்களில் அம்மன் திருவீதி உலாவுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இத்தேர் பழுதடைந்ததால் கடந்த சில ஆண்டுகளாக செல்லியாண்டி அம்மன் கோயில் தேரில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிலையில் கோயிலுக்குச் சொந்தமாக ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன.

சேலம் தம்மம்பட்டியைச் சேர்ந்த சிற்பிகள் புதிய தேரை அலங்கார வேலைப்பாடுகளுடன் வடிவமைத்தனர். தொடர்ந்து, திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்ட நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டு திங்கள்கிழமை காலை தேர்நிலையிலிருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது. சிறப்பு வழிபாடுகளுடன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

ஈரோடு மேட்டூர் சாலை, கிழக்கு கண்ணார வீதி, தேர் வீதி வழியாக சென்ற புதிய தேர் மீண்டும் நிலை சேர்ந்தது. பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT

Tags : Erode
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT