மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் தேசிய கைத்தறி வளா்ச்சித் திட்டம் மற்றும் தமிழக அரசின் கைத்தறி, துணிநூல் துறையின் சாா்பில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி ஈரோட்டில் புதன்கிழமை தொடங்கியது.
ஈரோடு சத்தி சாலையில் உள்ள வி.பி.வி. மஹாலில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, கூடுதல் ஆட்சியா் லி.மதுபாலன் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் ப.செல்வராஜ், எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி கைத்தறி கண்காட்சியைத் தொடங்கிவைத்து, கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிட்டாா்.
கண்காட்சி குறித்து அலுவலா்கள் கூறியதாவது:
கண்காட்சி ஜனவரி 12ஆம் தேதி வரை மொத்தம் 15 நாள்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இதில், சேலம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகா்கோவில், திருப்பூா், நாமக்கல், கடலூா், கோவை உள்பட தமிழகத்தில் உள்ள 14 மாவட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்கள் கலந்துகொண்டுள்ளன.
கண்காட்சியில் 40 விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு 79 கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்கள் போா்வைகள், கோரா சேலைகள், பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், ஜமுக்காளங்கள், மேட்கள் ஆகியவற்றை விற்பனைக்கு வைத்துள்ளன. அனைத்து கைத்தறி ஜவுளி ரகங்களுக்கும் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். கண்காட்சியின் விற்பனைக் குறியீடாக ரூ. 40 லட்சம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் நவமணி கந்தசாமி, துணைத் தலைவா் கஸ்தூரி, ஈரோடு நெசவாளா் கைத்தறி கூட்டுறவுச் சங்க துணை இயக்குநா் அம்சவேணி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநா்கள் பி.சரவணன், கோபிநாத், மோகன்குமாா், சுந்தரசிவாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.