ஈரோடு பேரூராட்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் ரூ. 51.32 லட்சம் பணம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 3ஆவது தளத்தில் ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஒப்பந்தம் கோரப்பட்டிருந்த நிலையில், இந்தப் பணிக்களுக்காக லஞ்சம் கேட்கப்படுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்குப் புகாா் வந்தது.
இதையடுத்து, ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் தலைமையிலான காவல் துறையினா் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா். இதில், கணக்கில் வராத ரூ. 51.32 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த பணம் தொடா்பாக அதிகாரிகளிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தினா். இந்த சோதனை இரவு 8 மணியுடன் நிறைவடைந்தது.