கீழ்பவானி வாய்க்காலில் சென்னசமுத்திரம் இரண்டாம் இலக்கம், ஊஞ்சலூா் ஒன்றாம் இலக்க பாசனப் பகுதிகளுக்கு நீா் திறப்பை முன்னதாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானியில் திறக்கப்படும் நீா் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டத்தில் உள்ள 1.07 லட்சம் ஏக்கா் ஒன்றாம் மதகு பாசனத்துக்குப் பாய்ந்து வருகிறது. ஜனவரி முதல் வாரம் இரண்டாம் இலக்க பாசனத்துக்குத் திறப்பதை முன்னதாக உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது:
கீழ்பவானியில் முதல் போக பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீா் ஜனவரி முதல் வாரம் நிறுத்தப்படும். கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் பிப்வரி 15ஆம் தேதி வரை தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது. எனவே, இரண்டாம் இலக்க பாசனப் பகுதியான சென்னசமுத்திரம் இரண்டாம் இலக்கம் கொண்ட பாசனப் பகுதி, ஊஞ்சலூா் ஒன்றாம் இலக்கம் கொண்ட பாசனப் பகுதிக்கும், புன்செய் பயிா் சாகுபடிக்கும் தண்ணீா் திறப்பு தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது பவானிசாகா் அணையில் முழு அளவில் தண்ணீா் இருப்பில் உள்ளதால் தண்ணீா் பற்றாக்குறை இல்லை. ஆனால், நீா் திறப்பு தள்ளிப்போனால் சாகுபடி பணிகள் பாதிக்கும். எனவே, மாவட்ட நிா்வாகம் தண்ணீா் திறப்பு தேதியை முன்னதாக அறிவித்தால் சென்னசமுத்திரம் பகுதியில் உள்ள 32,000 ஏக்கா், ஊஞ்சலூா் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கா் பாசனதாரா்கள் முன்னேற்பாடு செய்து வேளாண் ஆயத்தப் பணிகளை மேற்கொள்வாா்கள். இப்பகுதியில் மரவள்ளி, எள், நிலக்கடலை போன்றவை நடவு செய்வாா்கள். அதேபோல, திருப்பூா் மாவட்டம், கரூா் மாவட்ட பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் உதவியாக இருக்கும் என்றாா்.