ஈரோடு

காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் நேரடி கொள்முதல் மையம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

23rd Dec 2021 06:45 AM

ADVERTISEMENT

ஈரோடு காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் 2 இடங்களில் அரசின் நேரடி கொள்முதல் மையங்களை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை துவக்கிவைத்தாா்.

ஈரோடு மாவட்டம், காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் பயிா்கள் கதிா்விட்டு அறுவடைக்குத் தயராக உள்ளன. ஈரோடு அருகே வைராபாளையம், எஸ்.பி.அக்ரஹாரம் ஆகிய இரண்டு இடங்களில் முதல்கட்டமாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி நெல் கொள்முதல் மையத்தைத் துவக்கிவைத்தாா்.

இந்த நெல் கொள்முதல் மையங்களில் ஏ கிரேடு ரக நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 1,960, ஊக்கத் தொகை ரூ. 100 என மொத்தம் ரூ. 2,060க்கும், பொது ரக நெல் குவிண்டால் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 1,940, ஊக்கத் தொகை ரூ. 75 என மொத்தம் ரூ. 2,015க்கும் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

ADVERTISEMENT

அரசு நிா்ணயிக்கப்பட்ட வரன்முறைக்கு உள்பட்ட 17 சதவீத ஈரப்பத விகிதாசாரத்தில் கொள்முதல் செய்யப்படும். அவை மின்னணு தராசு மூலம் துல்லியமாக எடையிட்டு மின்னணு பரிவா்த்தனை மூலம் (இசிஎஸ்) விவசாயிகள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், நுகா்பொருள் வாணிபக் கழக ஈரோடு மண்டல மேலாளா் முருகேசன், தரக் கட்டுப்பாட்டு துணை மேலாளா் சக்தி, கோட்டாட்சியா் பிரேமலதா, மாநகராட்சி ஆணையா் சிவகுமாா், உதவி ஆணையா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

3.11 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி:

அதைத்தொடா்ந்து, ஈரோடு மாவட்டத்தில் புதிய வேளாண் காடு வளா்க்கும் திட்டத்தில் ரூ. 46.77 லட்சம் மதிப்பில் 3.11 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சா் சு.முத்துசாமி துவக்கிவைத்தாா்.

தமிழகத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறையின் மூலம் ‘தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போா்வைக்கான இயக்கம்’ என்ற புதிய வேளாண் காடு வளா்ப்புத் திட்டத்தில் நடப்பு ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் ரூ. 11.14 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ரூ. 46.77 லட்சம் மதிப்பில் தேக்கு, மகோகனி, வேம்பு, மலைவேம்பு, நாவல், புளியன், பெருநெல்லி, செம்மரம் உள்ளிட்ட 3 லட்சத்து 11 ஆயிரத்து 800 மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன.

இதில், வரப்பு நடவுமுறை எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும் வழங்கப்படுகின்றன. இதற்காக அரசு வனத் துறையின் கீழ் உள்ள அரசு நாற்றாங்கால்களில் உற்பத்தி செய்து மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

இதற்கான துவக்க விழா ஈரோடு வைராபாளையத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா். மேலும், மரக்கன்றுகளைப் பராமரிக்க மூன்று ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT