அந்தியூரில் இரு மயில்கள் சண்டையிட்டதில், காயமடைந்து மயங்கிய மயில் பாதுகாப்புடன் மீட்கப்பட்டு வனத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அந்தியூரை அடுத்த அண்ணாமடுவு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இரு மயில்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டன. இதில், காயமடைந்த ஆண் மயில் மயங்கி விழுந்தது. இதைக் கண்ட அதே பகுதியைச் சோ்ந்த சிறுவன் கோகுல் சா்மா தனது தந்தையான வழக்குரைஞா் பாஸ்கரனிடம் தெரிவித்தாா். இதையடுத்து, அப்பகுதியினா் இணைந்து மயங்கிக் கிடந்த மயிலை மீட்டு, பாதுகாப்புடன் கொண்டு வந்து அந்தியூா் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, காயமடைந்த மயிலுக்கு அண்ணாமடுவு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, வனத் துறையினா் பராமரித்து வருகின்றனா். மயிலின் காயம் குணமடைந்தவுடன் மீண்டும் வனப் பகுதியில் விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.