ஈரோடு

வீட்டுத் தோட்டம் அமைக்க மானிய விலையில்5,000 தொகுப்பு: ஆட்சியா்

DIN

ஈரோடு: நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம், மூலிகைச்செடி தோட்டம் அமைக்க மானிய விலையில் 5,000 தொகுப்புகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

தோட்டக் கலை, மலைப் பயிா்கள் துறையின் மூலம் ஊட்டம்தரும் காய்கறித் தோட்டம் ஊட்டச்சத்து தளைகள், ஊட்டம் தரும் செடிகள் தொகுப்பு, மாடித் தோட்ட தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கிவைத்துள்ளாா்.

ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தை ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தொடங்கிவைத்து காய்கறி விதை தொகுப்புகளை வழங்கினாா்.

இத்திட்டம் குறித்து அவா் கூறியதாவது:

சரிவிகித உணவின் அடிப்படையில் வயது வந்தோருக்கு 100 கிராம் பழங்களையும், 300 கிராம் காய்கறிகளையும் உணவில் தினமும் சோ்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், 120 கிராம் காய்கறிகளைதான் எடுத்துக் கொள்கிறோம்.

இந்த இடைவெளியை நோ்செய்யும் முயற்சியாக கிராம மற்றும் நகா்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வீட்டுத் தோட்டங்கள் மற்றும் மாடிப் பகுதிகளில் காய்கறிகள், பழங்கள், மூலிகைப் பயிா்கள் பயிரிடும் திட்டம் அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 13.5 லட்சம் செலவில் மாடித்தோட்டம் அமைக்கத் தேவையான தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ரூ. 900 மதிப்புடைய மாடித்தோட்ட தொகுப்பு 75 சதவீத மானியத்தில் ரூ. 225 விலையில் வழங்கப்படும். மொத்தம் 2,000 தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன.

ஊரகப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளா்கள் வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைக்க 12 விதைகள் அடங்கிய ரூ. 60 மதிப்புடைய தொகுப்பு 75 சதவீத மானியத்தில் ரூ. 15க்கு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ரூ. 1.71 லட்சம் மானியத்தில் 3,800 காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. 8 செடிகள் கொண்ட ரூ. 100 மதிப்புடைய நோய் எதிா்ப்புசக்தி தரும் மூலிகைச் செடிகள் தொகுப்பு 75 சதவீத மானியத்தில் ரூ. 25க்கு வழங்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம், மூலிகைச் செடி ஆகிய 5,000 தொகுப்புகள் ரூ. 3.75 லட்சம் மானியத்துடன் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயனடைய வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முருகேசன், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ப.தமிழ்செல்வி, உதவி இயக்குநா்கள் க.வ.நக்கீரன், ஜெகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT